மேற்குவங்க முதலமைச்சரின் உறவினர் ஒருவர் “எங்களை எதிர்த்தால், எதிர்ப்பவரின் கைகளை வெட்டுவோம்; கண்களை தோண்டுவோம்” என்று ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் பாணியில் பேசியதால் அந்த மாநிலம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மம்தா பானர்ஜியின் நெருங்கிய உறவினரான அபிஷேக் பானர்ஜி என்பவர் மேற்கு வங்க மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார். இந்நிலையில் நேற்று அவர் கொல்கத்தாவில் பேசியபோது எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தும் வகையில் மிகவும் ஆவேசமாக பேசியுள்ளதால் பதட்டம் ஏற்பட்டுள்ளது. அவர் அந்த கூட்டத்தில் பேசியதாவது: “மேற்கு வங்காள மக்களுக்கு எந்த விஷயத்தில் பாதிப்பு ஏற்பட்டாலும் நாங்கள் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம். டெல்லியின் மையப்பகுதியிலும், பாராளுமன்றத்திலும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நடத்திய பல்வேறு போராட்டங்கள் மூலம் இது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
மம்தா பானர்ஜி இங்கு ஆட்சியில் இருக்கும் மேற்கு வங்க மக்களை யாரும் எதுவும் செய்ய முடியாது. சிலர் இப்போது புதிதாக முளைத்துள்ளனர். அவர்கள் நம்மை முறைத்துப் பார்க்கத் தொடங்கியுள்ளனர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்காரனைப் பார்த்து முறைத்துப் பார்க்கும் துணிச்சல் எவனுக்காவது வந்தால், அவன் கண்களைத் தோண்டியெடுத்து ரோட்டில் வீசுவோம். எனவே எங்களை முறைப்பதை இன்றோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.
சிலர் நமக்கு எதிராக கைகளை தூக்குகிறார்கள். அவர்களது கைகள் வெட்டி வீசப்படும் என்பதை எச்சரிக்க விரும்புகிறேன். மம்தா இருக்கும் வரை நம்மை யாராலும் அசைக்க முடியாது” என்றார்.
எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தும் வகையில், குறிப்பாக பா.ஜனதாவினரை குறிவைத்தே மம்தாவின் உறவினர் பேசி இருப்பதாக கூறப்படுகிறது. இது அம்மாநிலத்தில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.