மத்தியில் ஆட்சி புரிந்து வரும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக நாடு முழுவதும் சென்று பிரசாரம் செய்ய உள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற திரிணாமுல் கட்சியின் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய மம்தா, ”தேர்தலுக்கு முன்பு ஒரு மாதிரியும், தேர்தல் முடிந்து பதவியேற்றபின்னர் அதற்கு நேர்மாறாகவும் நடந்து கொள்ளும் பாரதிய ஜனதாவின் நயவஞ்சகத்தை மக்கள் புரிந்துகொள்ள ஆரம்பித்துவிட்டனர். ஆட்சியை பிடித்த ஒரு மாதத்தில் பெட்ரோல், டீசல் மற்றும் ரயில் கட்டணத்தை உயர்த்தி நடுத்தர மக்களுக்கு பெரும் துரோகம் செய்துவிட்டனர். மத்திய அரசின் இந்த மக்கள் விரோத போக்கை கண்டித்து விரைவில் நாடு முழுவதும் பிரச்சாரம் செய்ய உள்ளேன்.
கடந்த தேர்தலில் பாஜகவுக்கு மேற்கு வங்காளத்தில் இரண்டு தொகுதிகள் கிடைத்தது. ஆனால் அடுத்து வரும் தேர்தலில் அவர்களை உள்ளே விடமாட்டோம். மதவாத கட்சிகளுக்கு மேற்குவங்கத்தில் இடமில்லை. திரிணாமுல் கட்சி ஒன்றுதான் சாதி, மத சமத்துவத்திற்காக பணியாற்றி வருகிறது’
இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்.