மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், நரேந்திரமோடி பிரதமராக ஒருபோதும் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு கொடுக்காது என்றும் மூன்றாவது அணியின் சார்பில் பிரதமர் வேட்பாளராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட்டால், எவ்வித மறுப்பும் இன்றி நாங்கள் ஆதரவு கொடுப்போம் என்று கூறியுள்ளார்.
மூன்றாவது அணியின் பிரதமர் வேட்பாளராக ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என தான் விரும்புவதாகவும், ஜெயலலிதாவுடன் தனக்கு எவ்வித கருத்துவேறுபாடுகளும் இல்லை என்றும், வாஜ்பாய் தலைமையிலான அரசில் ஏற்கனவே நாங்கள் ஒருங்கிணைந்து பணியாற்றியுள்ளோம் என்றும் கூறிய மம்தா, தமிழகத்தை சிறப்பாக நிர்வாகம் செய்துவரும் ஜெயலலிதாவால், கண்டிப்பாக இந்தியாவை வழிநடத்த முடியும் என தான் நம்புவதாக கூறினார்.
ராகுல்காந்தி பிரதமராக கண்டிப்பாக திரிணாமுல் காங்கிரஸ் ஆதரிக்காது என்றும், மேற்கு வங்க அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்றும் மம்தா குற்றம்சாட்டினார்.