காவல்துறையினர்களை மிரட்டினாரா மம்தா? நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் முடிவு
மேற்குவங்க சட்டசபைக்கு மொத்தம் ஆறு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் ஐந்து கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் வரும் 5ஆம் தேதி கடைசி கட்ட தேர்தல் நடைபெறுகிறது. அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கடைசிகட்ட தேர்தல் நடைபெறவுள்ள பகுதிகளில் தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று பேசிய ஒரு பொதுக்கூட்டத்தில் காவல்துறையை எச்சரிக்கும் வகையில் பேசியதாகவும், அவருடைய பேச்சு அடங்கிய ஒலிப்பதிவை தேர்தல் ஆணையம் கண்காணித்து தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்றும் கூறப்படுகிறது.
மேற்குவங்க மாநில சந்திப்ர் என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, பொதுமக்கள் மீது காவல் துறையினர் வன்முறையைக் கட்டவிழ்த்து விடுவதாகவும், நாங்கள் மீண்டும் ஆட்சி அமைத்த பிறகு அதற்கான விளைவுகளை காவல்துறையினர் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுத்ததாகத் கூறப்படுகிறது. குறிப்பாக தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்டுள்ள காவல்துறை அதிகாரிகளை அவர் நேரடியாக எச்சரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து எதிர்க்கட்சிகளான பாஜக, இடதுசாரிக் கட்சியினர் தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்த நிலையில் மேற்கு வங்க கூடுதல் தலைமைத் தேர்தல் அலுவலர் திவ்யேந்து சாகர், கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மம்தா பானர்ஜியின் பேச்சு அடங்கிய ஒலிப்பதிவை மாவட்ட ஆட்சியரிடம் கேட்டுள்ளோம். அதனைத் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்க இருக்கிறோம். அவர்கள் மம்தாவின் பேச்சை முழுமையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பார்கள் என்று கூறினார்.