தற்போது இளையதலைமுறையினர்கள் மட்டுமின்றி அனைவரிடமும் செல்பி மோகம் அதிகரித்து வருகிறது. இந்த செல்பி சில நேரங்களில் விபரீதமாக அவர்களுடைய உயிரையும் குடிக்கும் அளவுக்கு ஆபத்து உள்ளது என்பதை அவ்வப்போது பார்த்துதான் வருகின்றோம். இந்நிலையில் பாம்புடன் செல்பி எடுக்க சென்ற ஒருவரை அந்த பாம்பு கடித்ததால் எமனின் அருகில் வரை சென்று மீண்டும் வந்துள்ளார் ஒரு இளைஞர்.
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த ஒரு இளைஞர் தான் செல்லப்பிராணியாக வளர்த்த பாம்பு ஒன்றுடன் இணைந்து செல்பி எடுக்க முயற்சித்தபோது அந்த பாம்பு அவரை எதிர்பாராதவிதமாக கடித்து விட்டது. இதனால் அலறித்துடித்த அந்த நபர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு விஷமுறிவு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது அவர் நல்ல உடல் நலத்துடன் உள்ளார். இந்த சிகிச்சைக்காக மருத்துவமனை நிர்வாகம் அவரிடம் இருந்து 1 லட்சத்து 53 ஆயிரத்து 161 டாலரை கட்டணமாக பெற்றுள்ளது. இதுகுறித்து அவர் கூறுகையில், “பாம்பு கடித்தபோது என் மொத்த உடலும் ஆடிப்போய் விட்டது. கண்களும், நாக்கும் வெளியே வந்த மாதிரி உணரப்பட்டேன்” என்றார்.
பாம்புடன் செல்பி எடுக்கப் போய் ஒன்றரை லட்சம் டாலரை இழந்த நபர் குறித்த செய்தி அமெரிக்காவில் வைரலாக பரவி வருகிறது.