சிலி நாட்டில் இணையதளம் மூலம் பிறந்து இரு நாட்களே ஆன பெண் குழந்தை ஒன்று ரூ. 6,250-க்கு விற்கப்பட்ட சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண்குழந்தையை விற்பனை செய்த நபருக்கும், விலைக்கு வாங்கிய நபருக்கும் கடும் தண்டனை வழங்க அந்நாட்டு சமூக நல அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
கடந்த 2013 ஆம் ஆண்டு சிலி நாட்டை சேர்ந்த வெரோனிகா என்னும் 18 வயது இளம்பெண், தனக்கு பிறந்த இரு நாட்களே ஆன தனது பெண் குழந்தையை இணையதளம் மூலம் விற்க விளம்பரம் கொடுத்துள்ளார். இந்த விளம்பரத்தை பார்த்த ஜுவான் கார்லோஸ் என்பவர் அந்த பெண் குழந்தையை 102 டாலர்கள் கொடுத்து வாங்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்த வெரோனிகாவின் கணவர் தனது குழந்தை கடத்தப்பட்டதாக அளித்த புகாரை அடுத்து சிலி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில், வெரோனிகாவே சட்டவிரோதமாகக் குழந்தையை விலைக்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்த ஆதாரங்களுடன் அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளர். இதனால் குழந்தையை விற்பனை செய்த வெரோனிகா மற்றும் குழந்தையை வாங்கியவர் ஆகிய இருவருக்கும் தலா 2 ஆண்டு தண்டனை உறுதி என கூறப்படுகிறது.