பழமை வாய்ந்த திருத்தலமான பெண்ணாகடம் என்ற பகுதியில் தோன்றியவர் கலிக்கம்ப நாயனார். வணிகத் தொழில் செய்து வந்த இவர் தருமநெறியை பின்பற்றி வாழ்ந்து வந்தார். சடை முடி தாங்கி, இடப வாகனத்தில் வீற்றிருந்து தன்னை நாடும் பக்தர்களுக்கு இன்பம் அளிக்கும் சிவபெருமானின் திருவடியை மறவாத சிந்தனையாளராக இருந்தார். ஈசனின் மீது அளவற்ற அன்பு கொண்ட அவர் திருத்தூங்கானைமாடம் என்னும் திருக்கோவிலில் திருத்தொண்டு புரிந்து வாழ்ந்து வந்தார்.
மேலும் சிவபெருமானின் அடியார்களை, அளவற்ற அன்புடன் தன்னுடைய இல்லத்திற்கு அழைத்து இனிய கனி, கறி, நெய், பால், தயிர், தேன், சர்க்கரை முதலியவைகளுடன் உயர்ந்த உணவுகளைப் படைத்து அமுது செய்யும்படி உபசரிப்பார். அதுதவிர, அடியார்கள் புரியும் திருத்தொண்டிற்காக அவர்களுக்கு செம்பொன்னும் மகிழ்ச்சியாக வழங்குவார். அடியார்கள் விருப்பப்பட்டு எதுவும் கேட்டாலும் அந்த பொருள்களையும் தந்து அரிய தொண்டு செய்து வந்தார் கலிக்கம்ப நாயனார்.
ஒரு முறை தன்னுடைய மாளிகையில் அமுது செய்வதற்காக அடியார்கள் பலரையும் அழைத்திருந்தார் கலிக்கம்ப நாயனார். அவரின் அழைப்பை ஏற்று, ஏராளமான அடியார்கள் கலிக்கம்ப நாயனாரின் மாளிகையில் கூடினார்கள். வழக்கம்போல், வந்திருந்த அனைத்து அடியார்களின் பாதங்களையும் பணிந்து, இன்முகத்துடன் அவர்கள் அனைவரையும் உள்ளே அழைத்துச் சென்றார். கலிக்கம்ப நாயனாரின் மனைவியார், வீட்டை சுத்தம் செய்து, இனிய உணவுகளை ஏற்கனவே சமைத்து வைத்திருந்தார்.
அடியார்கள் வீட்டின் மாடக் கூடத்திற்குள் வந்ததும், கலிக்கம்ப நாயனார் கரத்தில் நீர் கொணர்ந்து திருத்தொண்டர்களுக்கு பாதபூஜை செய்யும்போது, அவரது மனைவி நீரை சொரிந்து உபசரித்தார். அடியார்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தபோதிலும் மனம் கோணாமல், மனமுவந்து இந்த திருத்தொண்டை கணவனும் மனைவியும் செய்தனர். அப்போது ஒரு அடியார் பாதபூஜைக்காக வந்து நின்றபோது, அவரை நேர் நோக்கிய கலிக்கம்ப நாயனாரின் மனைவி, பாதபூஜை செய்வதற்கு நீரை வார்க்காமல் அப்படியே நின்றார்.
அந்த அடியார் இதற்கு முன்பு கலிக்கம்ப நாயனாரிடம் வேலை செய்து வந்த பணியாள் ஆவார். அந்த பணியாள் ஏவல் செய்யும் பணியை வெறுத்து, சிவனடியாராக மாறி அன்பர்களுடன் கலந்து திருநீறு மற்றும் கண்டிகை புனைந்து கொண்டார். தற்போது கலிக்கம்ப நாயனார் வீட்டில் அமுது செய்யும் விதமாக அவரும் இங்கு வந்திருந்தார். அவரைப் பார்த்ததும் தான் கலிக்கம்ப நாயனாரின் மனைவியார் அப்படியே நின்று விட்டார்.
தாங்கள் கூறிய ஏவலை செய்து வந்த ஒருவரின் பாதத்திற்கு நீர் சொரிந்து பாத பூஜை செய்வதா? என்ற எண்ணம் அவரது சிந்தனையில் உதித்து விட்டது. தன் மனைவியின் எண்ணத்தை எவ்வித தாமதமும் இன்றி உணர்ந்து கொண்ட கலிக்கம்ப நாயனார், ‘அடியார் களின் முன் நிலைமை குறித்து எண்ணுவதும், அதன் காரணமாக அவர்களை வழிபடாமல் இருப்பதும் பிழை. யாவரே யாயினும் அடியார்கள் என்றால் வழிபடத் தக்கவரே யாவார். அடியார் அடிமலர் மீது நீர்வார்க்க மறுப்பது குற்றம்’ என்று கூறியவர், தன் மனைவி செய்த அந்த பிழைக்காக அவரது கரங்களை துண்டித்தார். பின்னர் தாமே நீரை சொரிந்து அந்த அடியாரின் அடிமலரைப் பூஜித்தார். அவர் அமுது செய்ய தாமே யாவும் படைத்து உபசரித்தார்.
அடியவரின் முன் நிலைமையை கருத்தில் கொண்டு அவரை வழிபடாமல் இருப்பது தகாது. அது பாவச் செயலாகும். ஆகையால் தான் பாத பூஜைக்கு நீர்வார்க்க மறுத்த தன் மனைவியின் கரத்தை துண்டித்தார் கலிக்கம்ப நாயனார். அவ்வாறு செய்ததால் அவரது மனைவி செய்த பாவம் அந்தப் பிறவியுடன் முடிந்தது. மறு பிறப்பில் அது தொடராது. மனைவியின் மீதான கருணையின் காரணமாகவும் அவர் இவ்வாறு செய்தார்.