பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசுக்கு இல்லை என மாநிலங்களவையில் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் மேனகா காந்தி நேற்று தெரிவித்தார்.
இது குறித்து அவர் எழுத்துபூர்வமாக அளித்த விளக்கம் ஒன்றில் “மகளிர் நலத்திட்டங்களில் பொருந்தக்கூடிய பிரிவுகளில் பாலியல் தொழிலாளர்களும் நன்மை பெற முடியும். பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்கும் திட்டம் எதுவும் மத்திய அரசுக்கு இல்லை.” என்று கூறியுள்ளார்.
இருப்பினும் பாலியல் தொழிலில் வலுக்கட்டாயமாக அப்பாவி பெண்களை ஈடுபடுடுத்தும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுப்பது தொடரும் என்று கூறினார்.
அவர் மேலும் தனது எழுத்துப்பூர்வ விளக்கத்தில் பாலியல் தொழிலாளர்களுகான மறுவாழ்வு மற்றும் சேமநலம் குறித்த திட்டங்களை விவரித்தார். ‘உஜ்ஜாவலா’ என்ற திட்டம் இருப்பதாகவும் இது வலுக்கட்டாய பாலியல் தொழில் திணிக்கப்படும் பெண்களை காப்பாற்றவும், மீட்டு மீண்டும் மறுவாழ்வு அளிக்கச்செய்யும் திட்டம் என்றார். இத்திட்டம் 2007ஆம் ஆண்டு முதலே இருந்து வருவதாக அவர் தெரிவித்தார்.
பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்க வேண்டும் என்று நாடு முழுதும் பல்வேறு தரப்புகளில் விவாதம் நடந்து வருகிறது. பாலியல் தொழில் செய்வோர் சார்ந்த சில அமைப்புகள் இந்தத் தொழிலை சட்டபூர்வமான குற்றமாக அணுகக்கூடாது என்ற கோரிக்கையை முன்வைத்தனர். பெண்களுக்கான தேசிய ஆணையத் தலைவர் லலிதா குமாரமங்கலம் பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
சட்டபூர்வமாக்கினால், வலுக்கட்டாய திணிப்புகளும், எச்.ஐ.வி. போன்ற நோய்களும் வெகுவாக குறைய வாய்ப்புள்ளதாக லலிதா குமாரமங்கலம் ஏற்கெனவே கூறியிருந்தார்.