இந்திய விஞ்ஞானிகளின் தீவிர முயற்சியால் உருவாக்கப்பட்ட மங்கள்யான் விண்கலம் இன்னும் 33 நாட்களில் செவ்வாய்கிரக சுற்றுவட்டப்பாதையை சென்றடையும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.
செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்வதற்காக இந்திய விஞ்ஞானிகளில் முயற்சியினால் ரூ.450 கோடியில் உருவாக்கப்பட்ட மங்கல்யான் என்ற விண்கலம் கடந்த நவம்பர் மாதம் 5ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் ஏவப்பட்டது. அந்த விண்கலம் நொடிக்கு 24.1 கிமீ வேகத்தில் தற்போது வெற்றிகரமாக பயணம் செய்து வருகிறது.
இந்த விண்கலம் இந்திய விஞ்ஞானிகளால் தொடர்ந்து ‘ஐ.எஸ்.டி.என்.’ என்ற நெட்வொர்க் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மங்கல்யான் விண்கலம் செவ்வாய் கிரகத்தில் இருந்து 90 லட்சம் கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இன்னும் 33 நாட்களில் விண்கலம் செவ்வாய் கிரக சுற்றுப்பாதையை சென்றடையும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.
பூமியில் இருந்து தற்போது 1890 லட்சம் கிலோமீட்டர் தூரம் சென்றுள்ள இந்த விண்கலம் இன்னும் 90 லட்சம் கிலோமீட்டர் தூரத்தை 33 நாட்களில் பயணம் செய்து செவ்வாய் கிரக சுற்று வட்டப்பாதையை சென்றடையும் என கூறப்படுகிறது.