சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள திருப்பாற்கடல் குளத்தை தூர்வாரும் போது அதில் மாணிக்கவாசகர் சிலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
சிதம்பரம் வேங்கான் தெருவிலுள்ள திருப்பாற்கடல் தீர்த்தகுளத்தை இந்து ஆலய பாதுகாப்புக் குழுவினர் நேற்று தூர் வாரினர். அப்போது 60 செ.மீ. உயரமும், 30 செ.மீ. அகலமும் கொண்ட நின்ற நிலையிலான மாணிக்கவாசகர் சிலை இருப்பதை அவர்கள் கண்டெடுத்தனர். உடனடியாக இதுகுறித்த ஆலய பாதுகாப்பு குழுவினர் தொல்லியல் துறைக்கு தகவல் கொடுத்தனர்.
இந்த தகவல் அறிந்ததும் அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை தொல்லியல் ஆய்வாளர் ஆ.சிவராமகிருஷ்ணன், இந்து ஆலய பாதுகாப்புக்குழுத் தலைவர் மு.செங்குட்டுவன், கிராம நிர்வாக அலுவலர் செந்தில் ஆகியோர் நேரில் சென்று மாணிக்கவாசகர் சிலையை ஆய்வு செய்தனர்.
ஆய்வுக்கு பின்னர், அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை தொல்லியல் ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் கூறுகையில், ”அஞ்சலிகை முத்திரையில் இச்சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒருகால் உள்புறமும், ஒருகால் முன்புறம் வைத்த நிலையிலும், எளிய ஆடை உடுத்திய நிலையிலும் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
தலையில் ருத்ராட்சங்களும், இரு கைகளின் உள்புறத்தில் ருத்ராட்சங்களுடன் மாணிக்கவாசகர் நின்ற நிலையில் சிலை உள்ளது. முகம் சதைப் பற்றுடன் வட்ட வடிவுடன் அமைந்துள்ளது. ஆதலால், 12 மற்றும் 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சிலையாக இருக்கலாம். மேலும் குளத்தின் படிக்கட்டுகளில் 4 கல்வெட்டுகள் அமையப் பெற்றுள்ளன. இவை 3ஆம் குலோத்துங்கன் காலத்து கல்வெட்டுகளாகும். மேலும் இக்கல்வெட்டுகள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம்” என்றார்