கீழக்கரை : ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கையில் கோவிந்தசாமி கோயிலில் மண் வெட்டியால் சாதத்தை கிளறி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் விநோத விழா நேற்று முன்தினம் நடந்தது. இதில் 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பங்கேற்றனர்.
உத்தரகோசமங்கை கண்மாய் கரையில் கோவிந்த சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரையில் அன்னதான விழா நடக்கும். நடப்பாண்டு நேற்று முன்தினம் நடந்த இவ்விழாவில் சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்று கூடி, உணவு சமைத்து சுவாமிக்கு படையல் வைப்பர். பொதுமக்களுக்கு பரிமாறும் முன்பு சாதத்தை மண்வெட்டி மூலம் கிளரப்படும். நடப்பழகர் புறப்பாடாகி இருப்பு நிலை வந்தவுடன் கொண்டாடப்படும் அன்னதான விழாவில் பங்கேற்பதற்காக 10 கி.மீ., சுற்றளவில் உள்ள கிராமங்களில் உள்ள பொதுமக்கள் ஒன்று கூடி உணவு சமைத்து கோவிந்தசுவாமிக்கு படையல் வைப்பார்கள்.
கிராமத்தலைவர் குருந்து கூறுகையில்: சித்திரையில் அழகருக்கு விழா நடக்கிறது. அதுசமயம் அழகர் புறப்பாடாகி இருப்பு நிலை வந்தவுடன் இங்கு அன்னதான விழா நடத்துவோம். பெண்கள் காய்கறி நறுக்குவர். ஆண்கள் சமையல் செய்வர். சமையலுக்கு வெள்ளைபூசணிக்காய் சாம்பார் பிரதானமாக இருக்கும். 850 படி அரிசியில் சாதம் தயாரிக்கப்படும்.
முதலில் கோவிந்த சுவாமிக்கு அன்னபூஜை நடந்து, பூஜாரி தொட்டுக் கொடுக்கும் மண்வெட்டியைக் கொண்டு சாதம் கிளறப்படும். கோவிந்தன் கோடாங்கி என்பவரால், ஐந்து தலைமுறையாக தொடர்ந்து இதுபோன்ற அன்னதான விழா நடந்து வருகிறது. இவ்விழாவிற்கு முன்பு உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயிலில் தபசு திருநாள் அன்று மேளதாளங்கள் முழங்க கை இடுக்கில் வைத்து திரி துவக்கம் மூலம் 3 நாட்கள் சுற்றுப்பகுதிகளில் நெல், மிளகாய், புளி, பருப்பு, அரிசி இவைகளை யாசகமாக பெற்று அதனைக் கொண்டு இந்த அன்னதான விழாவை நடத்துவோம். இதில் அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்பர். இவ்விழா முடிந்ததும், மழை பெய்யும். இதற்கான ஏற்பாடுகளை யாதவ மக்கள் செய்தனர், என்றார்.