மஞ்சப்பை. திரைவிமர்சனம்

Manja pai postewr -3தாத்தாவின் பராமரிப்பில் கிராமத்தில் வளர்ந்த விமல், சென்னை வந்து ஐ.டி. கம்பெனியில் வேலை பார்க்கிறார். ஒருநாள் தற்செயலாக சிக்னல் ஒன்றில் லட்சுமி மேனனை பார்த்து காதல் கொள்கிறார். தமிழ் சினிமா வழக்கப்படி முதலில் மறுக்கும் லட்சுமி மேனன், பின்னர் விமலின் கிராமத்து வெகுளித்தனத்தை ரசித்து அவருடைய காதலை ஏற்றுக்கொள்கிறார்.

இந்நிலையில் விமலுக்கு அமெரிக்கா செல்லக்கூடிய வாய்ப்பு வருகிறது. அமெரிக்கா செல்வதற்கு முன், தன்னுடன் சிறிதுகாலம் வந்து தங்கியிருக்கும்படி தாத்தா ராஜ்கிரணை கிராமத்தில் இருந்து சென்னைக்கு வரவழைக்கிறார். கிராமத்தில் வெகுளித்தனமாக வாழ்ந்த ராஜ்கிரண், விமல் குடியிருக்கும் அபார்ட்மெண்ட்டில் உள்ளவர்களுக்கு நல்ல எண்ணத்தில் செய்யும் விஷயங்கள் கூட தீமையாக முடிகிறாது. இதனால் ராஜ்கிரணை அந்த குடியிருப்பில் இருப்பவர்கள் வெறுக்கின்றனர்.

ராஜ்கிரண் அப்பாவித்தனமாக செய்த சில விஷயங்களால் விமலின் அமெரிக்கா பயணம் தடைபடுகிறது. மேலும் லட்சுமிமேனனின் காதலையும் இழக்க நேரிடுகிறது. இதனால் தாத்தா மீது கோபப்படும் விமல், அவரை கோபத்தில் மட்டந்தட்டி பேசிவிடுகிறார். பின்னர் ராஜ்கிரண் எப்படி இந்த பிரச்சனைகளை எல்லாம் சமாளித்து விமல்-லட்சுமி மேனனை சேர்த்து வைப்பதோடு, அந்த குடியிருப்பு மக்களிடமும் நல்ல பெயர் வாங்குகிறார் என்பதுதான் கதை.

படத்தின் உண்மையான ஹீரோ ராஜ்கிரண்தான். கனகச்சிதமாக பொருந்தும் வேடம். கிராமத்தில் இருந்து வரும் அப்பாவி தாத்தாவாகவே வாழ்ந்து காட்டியுள்ளார். தவமாய் தவமிருந்து படத்திற்கு பின்னர் ராஜ்கிரணுக்கு கிடைத்த நல்ல கதாபாத்திரம்.

வழக்கமான, சோகமான முகத்துடன் விமலை பார்க்கவே சகிக்கவில்லை. காதல் காட்சியில் கூட ஒரு எனர்ஜியான நடிப்பு இல்லை.

விமலுக்கு நேர்மாறாக துறுதுறுவென இருக்கிறார் லட்சுமி மேனன். காதல் காட்சிகளில் அனுபவமுள்ள நடிகைபோல நடித்து ரசிகர்களின் மனதில் பதிகிறார்.

பூவே பூச்சூடவா படத்தை சிறிது மாற்றம் செய்து கொடுத்துள்ளார் இயக்குனர் ராகவன். ஆனால் காட்சிகளில், திரைக்கதையில் அழுத்தமில்லை. பாடல்கள் மற்றும் பின்னணி இசை சுமார்தான். மொத்தத்தில் மஞ்சப்பையை ராஜ்கிரணுக்காக ஒருமுறை தாராளமாக பார்க்கலாம்.

Leave a Reply