கடந்த காங்கிரஸ் ஆட்சி காலத்தில் பிரதமராக மன்மோகன் சிங் அவர்களின் கவனத்துக்கு தெரிந்தே 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடுகளும் ஊழல்களும் நடந்துள்ளன என மத்திய முன்னாள் தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் வினோத் ராய் அதிரடியாக குற்றம்சாட்டியுள்ளார். இதனால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வினோத்ராய் எழுதிய “நாட் ஜஸ்ட் அன் அக்கவுண்டன்ட்’ (வெறும் கணக்காளர் மட்டுமல்ல) என்ற ஆங்கில புத்தகம் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்த புத்தகத்தில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு, நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு, ராணுவத் தளவாட கொள்முதல் ஒதுக்கீடு போன்றவற்றில் நடந்த நிதி முறைகேடுகள் குறித்து விரிவாக விளக்கியிருக்கிறார்.
“2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் ஊழல் நடைபெறும் என்று பிரதமராக இருந்த மன்மோகன் சிங்குக்கு, அவரது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த பலரும் எச்சரித்தனர். அவர் நினைத்திருந்தால் அலைக்கற்றை ஒதுக்கீட்டு முறைகேட்டை அப்போதே நிறுத்தியிருக்கலாம். ஆனால், அவர் எதுவும் செய்யாமல் இருந்தார். அந்த வகையில், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததற்கும், அதனால் அரசுக்கு ஏற்பட்ட இழப்புக்கும் மன்மோகன் சிங் பொறுப்பானவராகக் கருதப்படுகிறார்.
இவ்வாறு வினோத்ராய் தனது புத்தகத்தில் கூறியுள்ளார்.