மன்மோகன் சிங்கே முதல் குற்றவாளி – பி.சி.பரேக்

நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக நிலக்கரித் துறை முன்னாள் செயலர் பி.சி.பரேக் மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்துள்ளதை அடுத்து பரேக் இதனை தெரிவித்தார். சுரங்க ஒதுக்கீட்டில் வெளிப்படையான அணுகுமுறையை தாம் கொண்டு வந்ததாக  கூறினார்.

சுரங்கங்களை தன்னிச்சையாக ஒதுக்கீடு செய்வதற்கு தாம் எதிர்ப்பு தெரிவித்தாக பரேக் தெரிவித்துள்ளார். ஹிண்டல்கோ நிறுவனத்திற்கு சுரங்கம் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடைபெற்றதாக சிபிஐ முடிவுக்கு வந்தால், அதை ஒதுக்கீடு செய்த மன்மோகன் சிங்கே முதல் குற்றவாளி என்று பரேக் கூறினார்.

பரேக்கின் கருத்தை வரவேற்றுள்ள பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் யஸ்வந்த் சின்ஹா, நிலக்கரி சுரங்க மோசடி தொடர்பான பல்வேறு உண்மைகளை பரேக் வெளியிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஒதுக்கீடு நடைபெற்ற போது நிலக்கரித் துறையை தன் வசம் வைத்திருந்த மன்மோகன் சிங், மோசடி குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சுரங்க மோசடி விவகாரத்தில் பிரதமர் தனது நிலையை நாடாளுமன்றத்தில் தெரிவித்துவிட்டதாக காங்கிரஸ் கூறியுள்ளது. இந்த விவகாரத்தில் பாரதிய ஜனதா வேண்டும்மென்று வதந்தியை பரப்பி வருவதாகவும் அக்கட்சி குற்றம்சாட்டியுள்ளது. சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ள சிபிஐ, தனது 14வது முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

அதில் நிலக்கரித் துறை முன்னாள் செயலர் பரேக், ஆதித்ய பிர்லா குரூப் நிறுவனத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா மற்றும் நால்கோ, ஹிண்டால்கோ ஆகிய நிறுவனங்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.

Leave a Reply