1984ம் ஆண்டு நடந்த சீக்கியர் கலவரத்திற்கு காரணமானவர்களுக்கு பாதுகாப்பு அளித்தது, சீக்கியர்களை தாக்கிய போலீசுக்கு சன்மானம் அளித்தது தொடர்பாக அமெரிக்க கோர்ட்டில் பிரதமர் மன்மோகன் சிங் மீது மனித உரிமை மீறல் வழக்கு போடப்பட்டுள்ளது. இந்த வழக்கை ஏற்ற வாஷிங்டன் கோர்ட், மன்மோகனுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிட்டது.
அமெரிக்காவில் உள்ள ‘நீதிக்காக போராடும் சீக்கியர்’ அமைப்பு, கடந்த 20 நாளுக்கு முன், 1984 ம் ஆண்டு சீக்கியர் கலவரத்தை தூண்டியதாகவும், அதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு அளித்ததாகவும் காங்கிரஸ் தலைவர் சோனியா மீது வழக்கு போட்டது. அதில் சோனியாவுக்கு கோர்ட் சம்மன் அளிக்க உத்தரவிட்டது. இதேபோல, மன்மோகன் சிங் அமெரிக்கா வந்துள்ள நிலையில் அவருக்கு எதிராக இதே அமைப்பு நேற்று வழக்கு போட்டது. இந்த வழக்கை ஏற்ற வாஷிங் டன் கோர்ட் , மன்மோகனுக்கு சம்மன் அளிக்க உத்தரவிட்டது.
இந்த சம்மனை, பிரதமரிடம் 120 நாளுக்குள் வழக்கு போட்டவர்கள் தரப்பிலான வக்கீல் அளிக்க வேண்டும். ஆனால், அமெரிக்காவில் பலத்த பாதுகாப்புடன் உள்ள மன்மோகன் சிங்கிடம் சம்மனை வழங்க முடியாது. அதனால், அதற்கு அனுமதி கோரி தனி மனு ஒன்றையும் இந்த அமைப்பு தாக்கல் செய்துள்ளது.