பீகார் நக்சலைட் தாக்குதல்: சி.ஆர்.பி.எப் கமாண்டர்கள் 10 பேர் வீர மரணம்.
பிகார் மாநிலத்தில் நக்சலைட்டுகளுக்கு எதிரான பயங்கர தாக்குதல் சம்பவத்தில் 10 கமாண்டர்கள் வீர மரணம் அடைந்தனர். ஐ.இ.டி வகை வெடிகுண்டு இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் இந்த தாக்குதலில் நக்சலைட்டுகள் தரப்பில் 4 பேர் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இருதரப்பினர்களுக்கும் இடையே சுமார் 8 மணி நேரம் நடைபெற்ற இந்த சண்டை தற்போது முடிவுக்கு வந்துள்ளதாகவும், தாக்குதல் நடத்தப்பட்ட அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள கோப்ரா பிரிவு தற்போது இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாகவும் கூறப்படுகிறது.
இத்தாக்குதல் குறித்து காவல்துறை கூடுதல் டிஜிபி சுனில் குமார் கூறும்போது, “அவுரங்காபாத் – கயா பகுதியில் நக்சல் தேடுதல் வேட்டையில் கோப்ரா பிரிவு கமாண்டர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது கமாண்டர்களைக் குறிவைத்து நக்சலைட்டுகள் நடத்திய ஐ.இ.டி வகை வெடிகுண்டு தாக்குதலில் 10 வீரர்கள் கொல்லப்பட்டனர். 3 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்த வீரர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு, அனைவரும் பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காயமடைந்த வீரர்கள் அபாய கட்டத்தைத் தாண்டிவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்” என்று கூறினார்.
வீர மரணமடைந்த, காயமடைந்த கமாண்டர்கள் அனைவரும் கோப்ரா படைப் பிரிவின் 205-வது பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.