பி.வி.சிந்துவுக்கு கொடுத்தது போல் எனக்கும் வேலை கொடுங்கள்: மாரியப்பன்
ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி வென்ற பி.வி.சிந்துவுக்கு ஆந்திர அரசு துணை ஆட்சியர் பதவி வழங்கியது போல தங்கம் வென்ற எனக்கும் ஒரு நல்ல வேலை கொடுங்கள் என்று தமிழக அரசிடம் பாரா ஒலிம்பிக் நாயகன் மாரியப்பன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நேற்று இந்திய குடியரசு தலைவரிடம் இருந்து அர்ஜூனா விருதை பெற்று கொண்ட மாரியப்பன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, ‘நான் பதக்கம் பெற்றவுடன் தமிழக அரசு வேலை தருவதாக அறிவித்திருந்தது. ஆனால், இன்று வரை எனக்கு வேலை தரவில்லை. பி.வி.சிந்துவுக்கு ஆந்திர அரசு துணை ஆட்சியர் பதவி வழங்கியுள்ளது போல எனக்கும் தமிழக அரசு நல்ல பதவியை அளிக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்’ என்று தெரிவித்தார்.
மேலும் எனக்கு மத்திய அரசு கேல் ரத்னா விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால், மத்திய அரசு அர்ஜூனா விருதுதான் அளித்துள்ளது. இருப்பினும் இனிவரும் காலங்களில் உத்வேகத்துடன் செயல்படுவேன்’ என்று கூறினார்.
தமிழக அரசியல்வாதிகள் ஆட்சியை தக்க வைத்து கொள்ள போராடி வரும் நிலையில் மாரியப்பன் வேண்டுகோளை ஏற்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்