விண்வெளி வீரர்களுடன் ஃபேஸ்புக் நிறுவனர் நேரடி உரையாடல். ஜூன் 1-ல் நடைபெறுகிறது.
உலகின் நம்பர் ஒன் சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கின் நிறுவனர் மார்க் ஜுக்கர்பக் அவர்கள் ‘பேஸ்புக் லைவ் வீடியோ கால்’என்ற புதிய ஆப்ஸை அறிமுகப்படுத்தியுள்ளார். இதன் மூலம் அவர் விண்வெளியில் தங்கியிருக்கும் விண்வெளி வீரர்களும் பேசவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க, ரஷ்யா உள்பட பல நாடுகளின் விண்வெளி வீரர்கள் விண்வெளியில் தங்கியிருந்தபடியே புவியில் ஏற்படும் மாற்றங்கள், செவ்வாய் கிரகம் உள்பட பல்வேறு கிரகங்கள் குறித்து ஆய்வுசெய்து வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது விண்வெளியில் தங்கியிருக்கும் வீரர்களான டிம் கோப்ரா மற்றும் ஜெப் வில்லியம்ஸ் ஆகியோருடன் ‘பேஸ்புக்’ நிறுவனத்தின் நிறுவனராக மார்க் ஜுக்கர்பக் ‘பேஸ்புக் லைவ் வீடியோ கால்’ என்ற ஆப்ஸ் மூலம் வரும் ஜூன் மாதம் 1ஆம் தேதி நேருக்குநேர் பேசவுள்ளார்.
அமெரிக்க நேரப்படி அதிகாலை 12.55 மணியளவில் நடைபெறும் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அமெரிக்க வெண்வெளி ஆய்வு நிறுவனமான ‘நாசா’வின் பேஸ்புக் பக்கத்தில் மக்கள் எழுப்பியுள்ள சந்தேகங்கள் தொடர்பான கேள்விகளை மார்க் ஜுகர்பக் முன்வைப்பார். விண்வெளியில் உள்ள வீரர்கள் அந்த கேள்விகளுக்கான பதில்களை அளிக்கவுள்ளனர்.
உலகம் முழுவதிலும் உள்ள ஃபேஸ்புக் பயனாளிகள் ’பேஸ்புக் லைவ்’ மூலமாக இந்த நிகழ்ச்சியை நேரடியாக பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.