தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடன் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் நேற்று நேரில் சந்தித்து மாநிலங்களவை தேர்தலில் தங்கள் கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுவது குறித்தும், வரும் பாராளுமன்ற தேர்தலில் அமைய இருக்கும் கூட்டணி குறித்தும் விவாதித்தனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா தற்போது கொடநாடு எஸ்டேட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். இருந்தபோதிலும், முக்கிய அலுவல்களை அவர் அங்கிருந்தபடியே பார்த்து வருகிறார். இந்நிலையில் மார்க்கிஸ்ட் கட்சியின் முக்கிய தமிழக தலைவர்கள் சந்திப்புக்கு முதல்வர் அலுவலகம் நேற்று அனுமதி அளித்தது. கொடநாட்டில் நடந்த சந்திப்பில் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மற்றும் செளந்திரராஜன், பாலகிருஷ்ணன் ஆகியோர் முதல்வர் ஜெயலலிதாவை நேற்று மாலை சந்தித்தனர்.
வரும் பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி நடக்கவிருக்கும் மாநிலங்களவை தேர்தலில் தங்கள் வேட்பாளருக்கு ஆதரவு கொடுக்கும்படியும், வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் அமைய இருக்கும் கூட்டணி குறித்தும் அவர்கள் முதல்வருடன் பேசியதாக தெரிகிறது. இந்த சந்திப்பின்போது அதிமுகவின் பொருளாளர் ஓ.பன்னீர்செலவம், மற்றும் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.