கோலிவுட்டின் அனைத்து இயக்குனர்களையும் தற்போது பேய்பிடித்து ஆட்டி வருகிறது. புதுமுக இயக்குனர்கள், அறிமுக நடிகர்கள்தான் பேய்களை நம்பி களத்தில் இறங்கி வரும் நிலையில் பீல்டில் பல வெற்றிகளை பெற்ற சூர்யாவும், வெங்கட்பிரபுவும் ஏன் பேய்க்கதையில் இறங்கினார்கள் என்பது தெரியவில்லை. காமெடி மற்றும் ரேஸிங் த்ரில்லர் படங்களை இயக்குவதில் வல்லவரான வெங்கட்பிரபு, பேய்ப்பக்கம் போய், ரசிகர்களை மட்டும் ஆட்டி வைத்துள்ளார்.
சின்ன சின்ன திருட்டுகள் செய்து பிழைப்பு நடத்தி வரும் சூர்யாவும் பிரேம்ஜி அமரனும் திடீரென ஒரு விபத்தில் சிக்குகின்றனர். இந்த விபத்தில் பிரேம்ஜி அமரன் இறந்துவிட, தலையில் பலத்த காயமடைந்த சூர்யாவுக்கு அபூர்வ சக்தி வந்துவிடுகிறது. அதாவது உலகில் உள்ள பேய்கள் எல்லாம் காணும் அபூர்வ சக்தியாம். இந்த அபூர்வ சக்தியை வைத்து பேயோட்டி வருமானம் பார்க்க சூர்யா முடிவு செய்கிறார்.
தற்செயலாக ஒரு வீட்டில் பேயோட்ட செல்லும் சூர்யாவுக்கு அங்கு அவரது தந்தை பேயாக இருப்பதை பார்க்கின்றார். அவருடன் பேசும்போது தன்னுடைய குடும்பத்தை அழித்த வில்லனை அடையாளம் தெரிந்து கொண்டு வில்லனை எப்படி பழிவாங்குகிறார் என்பதுதான் கதை. இந்த கதையுடன் சூர்யாவின் கூடவே பிரேம்ஜியும் கூடவே பேயாக வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது
சூர்யாவின் கெட்டப், இளமை தோற்றம் ஆகியவற்றை பார்க்கும்போது இவரும் இவருடைய தந்தையை போல மார்க்கண்டேயன் வகையறாதான் என்பது உறுதியாகிறது. பேய் மற்றும் திருடன் என இரண்டு வெவ்வேறு கெட்டப்புகளில் வருகிறார். மேக்கப்பிற்காக பலமணி நேரம் மெனக்கெட்டு இருப்பார்கள் என தெரிகிறது. சாதாரண பழிவாங்கும் கதைதான் என்பதால் சூர்யாவின் நடிப்புக்கு தீனி போடும் வகையில் அழுத்தமான காட்சிகள் இல்லாதது பெரிய குறையாக உள்ளது.
நயன்தாரா, ப்ரணிதா இருவரையும் இயக்குனர் வெங்கட்பிரபு சரியாக பயன்படுத்தவில்லை என்றே தெரிகிறது. அதுவும் நயன்தாராவின் பல காட்சிகள் சோகத்திலேயே போய்விடுகிறது. ப்ரணிதா கிளாமரில் கலக்குகிறார். நயன்தாராவை விட ஸ்கோர் செய்துள்ளார் என்பதில் அவருக்கு திருப்திதான்
சமுத்திரக்கனி முதன்முறையாக வில்லனாக முயற்சி செய்துள்ளார். ஹீரோ மற்றும் கேரக்டர் ரோலில் பார்த்த ரசிகர்கள் இவரை வில்லனாக ஏற்றுக்கொள்வார்களா? என்பது சந்தேகம்தான். போலீஸாக வரும் பார்த்திபனின் வழக்கமான நக்கல் நையாண்டி மிஸ்ஸிங். எனவே இவரது கேரக்டரும் சாதாரணமாக மாறிவிட்டது.
படத்தில் முக்கிய ப்ளஸ்கள் என்று பார்தால் பின்னணி இசை, ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங். இவை மூன்றுமே அபாரம். வெங்கட்பிரபு தரப்பில் இருந்து நாம்தான் நிறையஎதிர்பார்த்துவிட்டோமோ என எண்ண தோன்றுகிறது. திரைக்கதையிலோ காமெடியிலோ அவருடைய பாணி கொஞ்சமும் தெரியவில்லை. பேய்க்கதையில் ஒன்று த்ரில் இருக்க வேண்டும். அல்லது இப்போதுள்ள டிரண்டின்படி காமெடி இருக்க வேண்டும். இந்த படத்தில் ரெண்டுமே மிஸ் ஆனது துரதிஷ்டமே. மேலும் பிரேம்ஜிக்கு அதிக காட்சிகள் கொடுத்து பயங்கரமாக வெறுப்பேற்றியுள்ளார். அடுத்த படத்திலாவது பிரேம்ஜி இல்லாத படம் ஒன்றை இயக்குவாரா? என்று பார்ப்போம்.
மொத்தத்தில் மாசு, சாதாரண தூசுதான்.