கோபண்ணாவின் அந்த உறவினர் இருவருமே கோபண்ணாவின் தாய்வழி மாமன்மார் ஆவர். அவர்களில் பெரிய மாமன் பெயர் மாதன்னா- இளைய மாமன் பெயர் அக்கன்னாவாகும். இவர்கள்தான் கோபண்ணாவை ஹைதராபாத்துக்கு அழைத்துச் சென்றனர். அப்போது ஹைதராபாத்தை தானீஷா எனும் நிஜாம் ஆட்சி புரிந்து வந்தார். இந்த தானீஷா இஸ்லாமிய மதத்தைச் சார்ந்தவராக இருந்த போதிலும் ஓர் அரசனுக்குரிய தலைமைப் பண்பு அவ்வளவும் இவரிடம் நிரம்பி இருந்தது. குடிமக்களை பாரபட்சமின்றி வழி நடத்தி ஆட்சி புரிந்து வந்தார். இவரது ஆட்சியில் வரி வசூல் மிகச் சிறப்பான முறையில் இருந்தது. நலத்திட்டங்களும் நன்கு நடைமுறைப்படுத்தப்பட்டன. இந்த தானீஷாவின் அவையில் இந்துக்களும் நல்ல நல்ல பதவிகளில் இருந்தனர். பிற மதத்தவரின் சுதந்திரத்தில் தானீஷாவும் தலையிடாதபடி ஒரு நல்லாட்சி நடைமுறையில் இருந்தது.
தானீஷாவிடம் கோபண்ணாவின் மாமன்மார்கள் இருவருக்கும் நல்ல பெயரும் வரவேற்பும் இருந்தது. அதுவே கோபண்ணாவுக்கும், தானீஷாவுக்கும் நல்ல அறிமுகத்தை ஏற்படுத்தித் தந்தது. கோபண்ணாவை விதிதான் வழி நடத்தியபடி இருந்தது. அந்த விதியே கோபண்ணாவுக்கு தானீஷா மூலமாக தாசில்தார் என்னும் வேலையை வாங்கித் தந்தது. ஹைதராபாத் நிஜாமின் ஆட்சிக்குட்பட்ட பகுதியாக அந்த நாளில் பத்ராசலம் எனும் ஊர் விளங்கிற்று. இங்கே கோதாவரி நதியின் பாய்ச்சல் ஒரு புறம்- மறுபுறம் ஒரு குன்றின் மேல் ராமபிரானது திருக்கோயில்! இந்தத் திருக்கோயிலை ஒரு காலத்தில் தம்மல்லி என்னும் பிராம்மணப் பெண் தன் சுய முயற்சியால் கட்டியிருந்தாள். அவள் இருந்த வரை கோயிலில் ஆறுகால பூஜைகளும் அன்னதானங்களும் தடபுடலாக நடந்தன. அவள் காலத்துக்குப் பிறகு அந்தக் கோயிலையும் கலிமாயை சூழ்ந்து கொண்டது. அந்தக் கோயிலில் ஒரு வேளை பூஜை நடைபெறுவதே பெரும் பாடாக இருந்தது. அப்படி ஒரு கோயில் கொண்ட பத்ராசலத்துக்கு ஒரு தாசில்தார் இருந்து அவர் காலமாகி விடவும் அங்கே ஒரு தேவை இருந்தது.
ஹைதராபாத் தானீஷாவும் மிகச் சரியாக கோபண்ணாவை பத்ராசலத்துக்கு தாசில்தாராக நியமனம் செய்தார். கோபண்ணாவுக்கு மனமெல்லாம் ராமபிரான் மேல்தான் இருந்தது. ஆகையால் ஆன்மீக வழியில் செல்லவே விரும்பியது. ஆனால் வயிற்றுப் பாடும் கொல்லம் கொண்ட பெல்லத்து அனுபவங்களும் வேறு வழியின்றி இந்த தாசில்தார் பொறுப்பை ஏற்க வைத்தன. மாமன்னர்களுக்கு நன்றி கூறி விட்டு பத்ராசலத்துக்கு வந்து பொறுப்பை ஏற்று அதை திறம்படவே செயல்படுத்தினான் கோபண்ணா. ஒரு தாசில்தாரின் கடமைகளை மிக நேர்மையாக நிறைவேற்றினான். குறிப்பாக வரிவசூலில் ஒரு பொன் கூட வீணாகதபடி அதை வசூல் செய்து அவ்வளவு பொன்னையும் யானை மேல் ஏற்றி வீரர்களின் காவலுடன் ஹைதராபாத்துக்குக் கொண்டு சென்று அங்க கஜானாவில் ஒப்படைத்து தானீஷாவின் தனிப்பட்ட பாராட்டையும் பெற்றுக் கொண்டான். வாழ்க்கை இப்படியே போய்விடுமா என்ன? பத்ராசலத்துக்கு வந்த நாள் முதலாக மலை மேல் உள்ள அந்த ராமன் கோயில் கோபண்ணாவின் கவனத்துக்கே வரவில்லை. ஒருநாள் ஒரு கால பூஜைக்காக பட்டாச்சாரி ஒருவர் கோயிலுக்குப் போவதை கோபண்ணா கவனிக்கவும் தான் விதியும் தன் விளையாட்டை கோபண்ணாவிடம் தொடங்கியது.
நெற்றியில் திருமண் காப்போடு கையில் திருத்துழாய் தட்டும் நைவேத்ய பிரசாதமுமாக மலை ஏறப்போன அந்தப் பட்டரை தடுத்து கோபண்ணா விசாரிக்கத் தொடங்கினான். அப்போது தான் மலை மேல் ராமர் கோவில் இருப்பதே தெரிய வந்தது.
ஹேராம்!
இது என்ன கொடுமை…
பத்ராசலத்தில் ஒரு ராமாகோயில் இருக்க நான் அது தெரியாத ஒரு அதிகாரியாக மட்டும் வாழ்ந்து கொண்டு இருக்கிறேனே… என்று கோபண்ணா மனது பதைத்துப் போனது. அவரோடு சேர்ந்து மலைமேல் சென்று பார்க்கவும் கண்களைக் கரித்தது. கோயில் அந்த அளவு பாழ்பட்டு தூர்ந்து போய் கிடந்தது.
பட்டரே, என்ன இது அநியாயம்… என் பிரபுவின் கோயில் இப்படியா இடிபாடுகளோடு இருப்பது?
நான் என்ன செய்யட்டும்… தம்மக்கா இருந்தவரை குறையில்லை. அதன்பின் இந்த பத்ராசலத்தில் எவ்வளவோ மாற்றங்கள். பிறமதத்தவர்களும் அதிகரித்து விட்டனர். உத்சவங்கள் கொண்டாடவோ, திருவிழாக்கள் காணவோ யாரும் ஒன்று சேர்வதில்லை. அதோடு பலர் ஊரை விட்டே போய் விட்டனர். நான் இருக்கும் வரை ஏதோ ஒரு கால பூஜை நடக்கும். எனக்குப் பிறகு அதுவும் கேள்விக்குறிதான்…
பட்டர் சொன்னது கோபண்ணாவின் கன்னத்தில் அறைந்தது போல் இருந்தது.
இல்லை பட்டரே! இந்த கோயிலை நான் இனி இப்படியே விடமாட்டேன். என்னை பிரபு எதற்காக இந்தப் பகுதிக்கு தாசில்தார் ஆக்கினார் என்பது தெரிந்து விட்டது. ஒரு அரசாங்க அதிகாரியாக இப்போதே உத்தர விடுகிறேன்.
இனி ஆறுகால பூஜைகள் நடக்கட்டும். இடிபாடுகளை சரிசெய்து இந்தக் கோயிலை நான் புதுப்பித்து விட்டுத்தான் மறுவேலை பார்க்கப் போகிறேன்… என்ற கோபண்ணா சொன்னபடியே செய்தும் முடித்ததுதான் விந்தை.
பொதுமக்களிடம் வசூலிக்கப்பட்ட வரிப்பணம் அவ்வளவும் கோயிலுக்கே செலவாயிற்று. மலைமேல் உயர்ந்த கோபுரத்தோடு கோயிலும் கம்பீரமாக நிமிர்ந்து எழும்பி நின்றது.
உள்ளே சீதா ராம லட்சுமணனோடு அனுமனுக்கும் சேர்த்து சன்னதி. கோவிலின் அழகும் எழிலும் அக்கம் பக்கத்தவர்களை எல்லாம் சுண்டி இழுத்தது. சாரிசாரியாக கோயிலுக்கு வந்து மனம் குளிர ராமபிரானையும் வணங்கினார்கள்.
கோபண்ணாவுக்கும் அரிய செயலை செய்துவிட்ட பூரிப்பு. அதேசமயம் தானீஷாவுக்கு வசூலித்த வரிப்பணத்தை சென்று கட்ட வேண்டிய நாளும் வந்தது. ஆனால் அதையெல்லாம்தான் கோயில் கட்ட செலவழித்தாகி விட்டதே…?
இப்போது என்ன செய்வது?
கோபண்ணா மனைவி கலங்கிப்போய் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்? என்று கேட்டாள்.
என்ன செய்தேனோ அதைச் சொல்வேன்… நான் என்ன நம் குடும்பத்துக்கா செலவு செய்தேன்… அவ்வளவும் கோயிலுக்குத்தானே போனது. ஒரு ஊரில் கோயில் சிறப்பாக இருந்தால் அல்லவா மழை பொழியும். மக்களும் மன அமைதி யோடு வாழ்வார்கள். எனவே நான் மக்களுக்கான நல்லதைத்தான் செய்துள்ளேன். இதை தானீஷா பாராட்டவே செய்வார். சொல்லப்போனால் அவர் செய்யத் தவறியதை நான் செய்துள்ளேன். எனவே எனக்குப் பரிசுகளும் அளிப்பார்… என்றான் கோபண்ணா.
வாழ்வில் நாம் நினைப்பது போலவா எல்லாமே நடக்கிறது?
தானீஷா முன்னால் கோபண்ணா ஒரு குற்றவாளியாக நிறுத்தப்பட்டான். தானீஷா அவன் சொன்ன எதையும் கேட்கவே இல்லை. நீ தன்னிச்சையாக நடந்து கொண்டாய்… அரசாங்கப் பணத்தைக் கொண்டு கோயில் கட்டினாய். இது ராஜ துரோகம் எனவே உன்னைச் சிறையில் இடுகிறேன்- என்று கோபண்ணாவுக்கு சிறைத்தண்டனை விதித்து விட்டார்.
சிறையில் அடைக்கும் முன் கோபண்ணாவிடம் இன்னும் கூட வரிப்பணம் இருக்கக்கூடும் என்று கருதி கோபண்ணாவை சவுக்கால் அடித்து சித்ரவதை செய்தும், ஹைதராபாத் நகரமே தெருவில் நின்று பார்த்திட கட்டி இழுத்துச் சென்றும் செய்த கொடுமைகளும் கொஞ்ச நஞ்சமல்ல.
ஒரு மனிதன் பக்தியோடு கோயில் கட்டியதற்கா இத்தனை பெரிய தண்டனை? கோயில் கட்டிய விதம் தவறாக இருந்தாலும் அதற்கு இவ்வளவு பெரிய தண்டனை என்பது எந்த வகையில் சரி?
இவ்வளவு தூரம் கொடுமைகள் நடக்கும்போதும் அந்த ராமன் என்ன செய்தான்? ஏன் வேடிக்கை பார்த்தான்? இது என்ன சோதனை…?
கேள்விகள் எழுகிறதல்லவா?
இந்தக் கேள்விகள் கபீர்தாசரிடமும் எழும்பியது.
பக்தன் பொருட்டு அவரே ராமபிரானிடம். பிரபு இதெல்லாம் எந்த வகையில் சரி? என்று கேட்கவும் செய்தார். ராமபிரானும் அதற்கான பதிலைக் கூறினான்…
கபீர்… கலியுகத்தில் எப்போதும் விளைவுகளுக்காகவே செயல்பாடுகள். ஆனால் நாம் உலகமாயை காரணமாக செயலுக்குத்தான் விளைவு என்று கருதுவதும் பேசுவதுமாக இருக்கிறோம்.
கோபண்ணா என் பரம பக்தன்தான்! பக்தி கராணமாக அவன் உண்மையாக வாழ்கிறவனும்கூட… ஆனால் இப்போது அவன் அனுபவிக்கும் கொடுமைக்கெல்லாம் காரணம் அவனது பூர்வ கர்மம்தான்!
முன் ஜென்மத்தில் அவன் அனேக கிளிகளை கூண்டில் அடைத்து வளர்த்தான். அப்போது அவைகளின் சிறகுகளை வெட்டியும் அவைகளுக்குச் சரியாக உணவளிக்காமலும் அவைகளை சித்ரவதை செய்தான். அதனால் பல கிளிகள் இறந்து போயின. அந்தப் பாவம்தான் இப்போது அவனுக்கான சிறைவாசமாகவும் பழியாகவும் உருவாகியுள்ளது.
எதற்கும் ஒரு அளவு உண்டு. இந்தத் துன்பத்துக்கும் அளவு இருக்கிறது. இவை அவ்வளவும் இன்றிரவோடு தீர்ந்து விடும். நாளை முதல் அவன் கோயில் கட்டிய புண்ணியமும் பக்தியின் பயனும் அவனை இனி வழி நடத்தும். அதுமட்டுமன்றி காலகாலத்துக்கும் அவன் பக்தி இனி வரும் மாந்தர்களால் போற்றும் ஒன்றாகவும் இருக்கும். கூடவே அவர்கள் கோபண்ணாவின் கர்மத்துய்ப்பையும் சேர்த்தே எண்ணுவார்கள்.
நம் வாழ்வில் நம் மனமறிந்து தவறுகள் செய்திடாத நிலையில் ஒரு துன்பம் நேர்கிறதென்றால் அதை பூர்வ கர்மம் என்று கருதி மகிழ்ச்சியோடு ஏற்று அனுபவிக்க வேண்டும். வெற்றிகரமான வாழ்வும் இன்பமான வாழ்வும் எந்த நிலையிலும் ஞானத்தைத் தராது. அது ஆசாபாசங்களை வளர்த்து கலிமாயையில் நம்மை நிரந்தரமாக சிக்க வைத்து விடும். எனவே நிரந்தரமற்ற மாயா இன்பங்களை பற்றற்ற பற்றோடு அனுபவிக்க வேண்டும். துன்பத்தையே உளமாற விரும்ப வேண்டும். அதைக் கண்டு அச்சம் கூடாது. நடுநிலையான ஞானிகள் இவ்வாறுதான் நடந்து கொள்வர். கோபண்ணாவும் எல்லா துன்பங்களையும் பார்த்து விட்டான். பழிச் சொல்லையும் கேட்டு விட்டான். அவன் இனி மாயை வசம் சிக்காமல் பக்குவமாக நடந்து கொள்வான் என்றார். கபீருக்கும் பெரும் ஞானோபதேசம் கிடைத்தது. கபீர் மூலமாக இந்த உலகுக்கும் கிடைத்தது. அன்று இரவு கோபண்ணாவின் பக்திக்குண்டான வரசித்தி செயல்படத் தொடங்கியது. ராமனும் லட்சுமணனுமே தானீஷாவுக்கு கோபண்ணா செலுத்த வேண்டிய பொன் மூட்டையை எடுத்துக் கொண்டு இரண்டு வேடுவர்கள் போல தானீஷா முன் போய் நின்றனர்.
பொற்காசுகளை தானீஷா முன் கொட்டினர். அரசே… இது கோபண்ணா செலுத்த வேண்டிய வரிப்பணம். அவரை சிறையில் இருந்து விடுவியுங்கள் என்றனர். தானீஷாவும் நீங்கள் யார் என்று கேட்காமல் இருப்பாரா? நாங்கள் கோபண்ணாவின் ஏவலர்கள். அவர் தரும் பிரசாதத்துக்காக நாங்கள் எதையும் செய்வோம்… அடேயப்பா… இவ்வளவு நாட்கள் எங்கே போய் விட்டீர்கள்? நாங்கள் யாத்திரை போயிருந்தோம், இங்கு வந்து பார்க்கவும்தான் உண்மை தெரிந்தது. உடனே எங்கள் உழைப்பில் சம்பாதித்த பொன்னோடு புறப்பட்டு வந்துவிட்டோம்.
அது சரி… உங்கள் பெயர்?
என் பெயர் ராம்ஜி… இவன் லஷ்மண்…
நல்லது… இப்போது நான் என்ன செய்ய வேண்டும்?
ஊருக்கு வெளியே உள்ள சிறையில் இருக்கும் கோபண்ணாவை விடுவியுங்கள். முன்னதாக வரிப்பணம் பெற்றுக்கொண்ட ரசீதும் அத்துடன் விடுதலைப் பத்திரமும் எழுதி கையெழுத்திட்டு தாருங்கள்…
தானீஷாவும் அப்படியே செய்தார் ராம லட்சுமணர்களும் புறப்பட்டனர்!
ஊருக்கு வெளியில் உள்ள சிறைச் சாலையில் கோபண்ணா மனம் உடைந்து போயிருந்தான். போதும் நான் பட்ட பாடு… என்னைப் பார்ப்பவர்கள் இனி எந்த நல்ல காரியத்தையும் செய்ய முன்வர மாட்டார்கள். நானும் இனி வாழ்வதை விட சாவது மேல்… ராமபிரபுவும் என்மேல் கருணை காட்டப் போவதில்லை. அவர் வரையில் நானொரு பாவி.
இனி இந்த பாவியும் உயிர் வாழக் கூடாது…- என்கிற முடிவுக்கு வந்து விஷத்தைக் குடிக்க முடிவு செய்கிறான் கோபண்ணா. அதன் பொருட்டு சிறைத் தோட்டத்தில் பணியாற்றும்போது விஷச்செடி ஒன்றை அடையாளம் கண்டு கொண்டு அதில் இருந்து பறித்து வந்திருந்த விஷ இலைகள் அரைக்கப்பட்டு விழுதாக அவன் பக்கத்தில் அவன் சாப்பிடத் தயாராயின! முன்னதாக இறுதியாக தியானிக்க எண்ணி தியானத்தில் ஆழ்ந்தான்! இதற்குப் பிறகே அற்புதங்கள் அரங்கேறத் தொடங்கின. ராம லட்சுமணர்கள் சிறைக்கு வந்து அங்குள்ள அதிகாரியிடம் விடுதலைப் பத்திரத்தைக் காட்டி அவரையும் அழைத்துக் கொண்டு கோபண்ணா இருந்த இருண்ட சிறைக்கு வந்தனர்.
சிறையில் கோபண்ணா! சிறை அதிகாரி கதவைத் திறந்து விட்டவனாக விலகிட ராம லட்சுமணர் கோபண்ணா அருகில் சென்றனர். அந்த விஷவிழுது தீயவாடையோடு அவர்கள் நாசியைக் குடைந்தது. ராமன் லட்சுமணனை அர்தபுஷ்டியோடு பார்க்கவும் அந்த விஷ விழுதை லட்சுமணன் எடுத்து விழுங்கினான்.
ஆதிசேஷனின் அம்சம்… விஷமெல்லாம் ஒரு பொருட்டா என்ன…? பதிலுக்கு தானீஷா கொடுத்த ரசீதை விஷம் இருந்த இடத்தில் வைத்தான் ராமன். பின் இருவரும் ஒரு சேர ஆசிர்வதித்தவர்களாக சிறைக்கதவு திறந்திருக்க வந்த சுவடு தெரியாமல் திரும்பத் தொடங்கினர்.
கோபண்ணாவிடம் இது எதுவுமே தெரியாதபடி த்யானம்!
தானீஷா ராம லட்சுணர்கள் தந்த பொற்காசுகள் மலைபோல குவிந்திருப்பதைப் பார்த்தபடியே இருந்தார். இவ்வளவு காசுகளை எப்படி இருவரால் சுமந்து வர முடிந்தது என்பது அவருக்குள் கேள்வியாக உறுத்திக் கொண்டிருந்தது. அடுத்து அதன் ஜொலிக்கும் ஒளி… அதில் ஒரு காசை எடுத்து உற்றுப் பார்க்கவும் அதில் ராம் எனும் எழுத்து!
அடுத்த நொடி தானீஷாவுக்கு சுரீர் என்றது! வந்தவர்கள் சாமான்ய மனிதர்கள் அல்ல என்பதும் புரியத் தொடங்கியது.