‘மாயவன்’ திரை விமர்சனம்
ஒரு தயாரிப்பாளராக பல வெற்றி படங்களை தயாரித்து கார்த்திக் சுப்புராஜ் உள்பட பல கலைஞர்களை அறிமுகம் செய்த சி.வி.குமார் முதல்முறையாக இயக்குனர் துறையிலும் காலடி வைத்துள்ளார். அவரது முயற்சிக்கு வெற்றி கிடைத்ததா? என்பதை பார்ப்போம்
போலீஸ் அதிகாரி சந்தீப் கிஷான் ஒரு திருடனை விரட்டி பிடிக்க முயற்சிக்கும்போது தற்செயலாக தீனா என்ற ஜிம் டிரைனர் தனது மனைவியை கொலை செய்வதை பார்க்கின்றார். இருவருக்கும் இடையே நடக்கும் சண்டையில் சந்தீப், நூலிழையில் உயிர் தப்ப, தீனா கொல்லப்படுகிறார். ஆனால் தீனா கொலை செய்த அதே பாணியில் இன்னொரு கொலை நடக்க சந்தீப் அதிர்ச்சி அடைகிறார். இறந்து போன ஒருவரின் பாணியில் இன்னொருவர் எப்படி கொலை செய்ய முடியும் என்ற குழப்பத்தில் இந்த வழக்கை விசாரணை செய்யும் சந்திப்புக்கு மீண்டும் அதே பாணியில் ஒரு நடிகையும், விஞ்ஞானியும், உளவியல் நிபுணரும் கொலை செய்யப்படுவது தெரிகிறது.
இந்த தொடர் கொலையால் அதிர்ச்சி அடையும் சந்தீப், தனது சக அதிகாரியான பகவதி பெருமாள் மற்றும் மனநல டாக்டர் லாவண்யாவுடன் இணைந்து பல உண்மைகளை கண்டுபிடித்து கொலையாளியையும் நெருங்குகிறார். இறுதியில் கொலையாளி யார், எதற்காக தொடர் கொலைகள் என டெக்னாலஜி விளக்கத்துடன் படம் முடிகிறது.
‘மாநகரம்’ சந்தீப்கிஷானுக்கு இது முக்கிய படம். போலீஸ் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்தி கேரக்டருக்கு வலு சேர்க்கின்றார். லாவண்யாவுடன் தொழில் முறையில் மட்டும் அறிமுகம், பின்னர் துப்பு துலங்க உதவுதல் என்ற வகையோடு நிறுத்தி கொண்டு தனியாக காதல் டிராக் இல்லாமல் செய்த இயக்குனருக்கு பாராட்டுக்கள். லாவண்யாவின் நடிப்புக்கு முழு தீனி இல்லை என்றாலும் அவர் தனது பணியை சரியாக செய்து திருப்தி அடைந்துள்ளார்.
இந்த படத்தின் முதுகெலும்பு கேரக்டர்களாக பகவதி பெருமாள், டேனியல் பாலாஜி, ஜெயப்பிரகாஷ் ஆகிய மூவரும் உள்ளனர். மூவரின் நடிப்பும் ஒளிப்பதிவாளர் கோபி அமர்நாத், கலை இயக்குனர் கோபி ஆனந்த் ஆகியோர் படத்திற்கு பலம். குறிப்பாக நலன்குமாரசாமியின் திரைக்கதை, வசனத்தால் படம் நிமிர்ந்து உட்காருகிறது.
இயற்கையை மீறி சாகாவரம் பெற வேண்டும் என்ற ஒரு விஞ்ஞானியின் ஆசையால் ஏற்படும் விளைவுகளை நம்பகத்தன்மையுடனும், புத்திசாலித்தனமான காட்சி அமைப்புகளுடன் கூறியுள்ளது சிறப்பு. சித்தர்களின் கூடுவிட்டு கூடு பாயும் தன்மையை டெக்லாஜியுடன் இணைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் நிச்சயம் ஆடியன்ஸ்களை கவரும் என்பதில் சந்தேகம் இல்லை.
4/5