அமெரிக்காவில் உள்ள லாஸ்வேகாஸ் நகரின் எம்.ஜி.எம். கிராண்டில் நேற்று நடைபெற்ற குத்துச்சண்டை போட்டி ஒன்றில் அமெரிக்க வீரர் மேவெதர் மாபெரும் வெற்றி பெற்று ஒரு மணி நேரத்தில் ரூ.1,100 கோடி பரிசை வென்றார்.
இந்த நூற்றாண்டுக்கான குத்துச்சண்டை’ என்று கவர்ச்சியாக விளம்பரப்படுத்தப்பட்ட இந்த போட்டி, இந்திய நேரப்படி நேற்று காலை 8.30 மணிக்கு தொடங்கி 12 சுற்றுகளாக நடைபெற்றது. ஒருமணி நேரம் நீடித்த இந்த போட்டியில் மேனி பாக்கியாவும், மேவெதரும் பயங்கரமாக மோதினர்.
இந்த போட்டிக்கு நியமனம் செய்யப்பட்ட மூன்று நடுவர்களும் மேவெதருக்கு ஆதரவாகவே முடிவுகளை வெளியிட்டனர். இரண்டு நடுவர்கள் 116-112 புள்ளிகளையும் மற்றொரு நடுவர் 118-110 புள்ளிகளையும் வழங்கியதால் மேவெதர் சாம்பியன் பட்டம் பெற்றார். இவருக்கு ரூ.1100 கோடி பரிசோடு ரூ.7 கோடி மதிப்பிலான பெல்ட்டும் அணிவிக்கப்பட்டது.
வெற்றிக்கு பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசிய மேவெதர் “கடவுளுக்கும், குத்துச்சண்டை பிரியர்களுக்கும் நன்றி. அநேகமாக செப்டம்பரில் நடைபெறவுள்ள போட்டியுடன் ஓய்வு பெறுவேன்’ என்றார்.
இந்த போட்டியில் ஆரம்பத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்தி வந்த மானி பேக்கியோ திடீரென தோல்வியடைந்தார். தோல்வி குறித்து அவருடைய ஆதரவாளர்கள் கூறும்போது, ” கடந்த 9 மாதங்களுக்கு முன் கோப் பிரையன்டுடன் மோதிய போட்டியின் போது, மானி பேக்கியோவுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டிருந்தது. மேவெதருடன் போட்டி தொடங்குவதற்கு முன்னர் அவருக்கு தோள்பட்டையில் வலி தெரியாமல் இருக்க ஊசி போட்டுக் கொள்ளலாம் என்று முதலில் சொல்லப்பட்டது. பின்னர் திடீரென்று ஊசி போட்டுக் கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் மானி தோள்பட்டை வலியுடனே போட்டியில் பங்கேற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். தோள்பட்டை வலி காரணமாக அவரால் இரண்டு கைகளை கொண்டும் குத்துக்களை இறக்க முடியவில்லை. பெரும்பாலும் ஒரு கையுடன்தான் மேவெதரை எதிர்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டார். அவருக்கு விரைவில் தோள்பட்டையில் அறுவை சிகிச்சை நடைபெறவிருக்கிறது” என்று கூறினர்.