மக்கள் நல கூட்டியக்கத்தின் செயல்திட்டம். காணாமல் போன வைகோவின் கொள்கைகள்

மக்கள் நல கூட்டியக்கத்தின் செயல்திட்டம். காணாமல் போன வைகோவின் கொள்கைகள்
vaiko
வைகோ தலைமையிலான மக்கள் நல கூட்டு இயக்கம் அரசியல் கூட்டணியாக உருமாறும் என்று நேற்று வைகோ கூறியதை அடுத்து குறைந்த பட்ச செயல்திட்டத்தின் வரைவு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இந்த வரைவு அறிக்கையில் வைகோ பல வருடங்களாக முழங்கி வந்த தனி ஈழம், கூடங்குளம் ஆகிய பிரச்சனைகள் குறித்து எதுவும் குறிப்பிடாதது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. வைகோவின் முக்கியமான கொள்கைகள் இந்த வரைவு திட்டத்தில் காணாமல் போயுள்ளதாக அரசியல் வல்லுனர்கள் கருத்து கூறிவருகின்றனர்.

மக்கள் நல கூட்டு இயக்கத்தில் இடதுசாரிகள் முக்கிய பங்கு வகிப்பதால் அவர்களை சமாதானப்படுத்தவே வரைவு அறிக்கையில் தமிழீழம் இடம்பெறவில்லை என கூறப்படுகிறது. அதேபோன்று விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்க வேண்டும் என்ற முக்கிய கோரிக்கையையும் வரைவு அறிக்கையில் மிஸ் ஆகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கூடங்குளம் அணு உலையை ஆரம்பம் முதலே எதிர்த்து வந்த வைகோ, தன்னுடைய  குறைந்த பட்ச செயல்திட்ட அறிக்கையில், கூடங்குள அணு உலை எதிர்ப்பு நிலை பற்றி குறிப்பிடப்படவில்லை. கூடங்குளம் என்ற வார்த்தை கூட இந்த அறிக்கையில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுவும் இடதுசாரிகளுக்காகத்தான் என கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி பலமாக இருப்பதால்,  தற்போது வெளியிடப்பட்ட குறைந்த பட்ச செயல்திட்ட அறிக்கையில், “முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி உயரத்திற்கு தண்ணீரைத் தேக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. வழக்கமாக முல்லை பெரியாறு விவகாரத்தில் கேரளாவை கடுமையாக கண்டிக்கும் ம.தி.மு.க.வும், விடுதலை சிறுத்தைகளும், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்காக சற்று பின்வாங்கியுள்ளனர்.

இவ்வாறு ஆரம்ப நிலையிலேயே முரண்பாடுகளின் மொத்த மூட்டைகளாக செயல்பட்டு வரும் மக்கள் நல கூட்டு இயக்கம் எவ்வாறு செயல்பட போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply