கடந்த சில நாட்களாக பாரதிய ஜனதா கட்சியை கடுமையாக விமர்சனம் செய்து வந்த மதிமுக பொதுச்செயலாலர் வைகோ, அந்த கூட்டணியில் இருந்து விலகுவார் என எதிர்பார்க்கப்பட்டது. சுப்பிரமணிய சுவாமி விடுத்த ஒரு அறிக்கையில் வைகோ தாமாகவே முன்வந்து கூட்டணியில் இருந்து விலகாவிட்டால், கூட்டணியில் இருந்து வெளியேற்றுவோம் என்று எச்சரித்திருந்தார். இந்நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
இன்று சென்னை எக்மோரில் உள்ள தாயகம் கட்சி அலுவலகத்தில் , ம.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம், உயர்நிலைக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய வைகோ பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “வாஜ்பாய், அத்வானி போன்ற தலைவர்கள், தேசிய ஜனநாயக கூட்டணியை வழிநடத்திச் சென்றபோது, கூட்டணி கட்சிகளிடம் இருந்த அணுகுமுறை, தற்போது நரேந்திரமோடி தலைமையிலான பா.ஜ. கூட்டணியில் இல்லை. எனவே, தமிழகத்தில், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ம.தி.மு.க. விலகுகிறது” என்று தெரிவித்தார்.
ம.தி.மு.க., விலகல் குறித்து தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில்; கூட்டணியில் இருந்த போது தொகுதிகளை விட்டு கொடுத்தோம். சகோதர உணர்வுடன் தான் இருந்தோம். ஆனால் உலகம் முழுவதும் மோடியை பாராட்டும் போது மோடியை வேண்டுமென்றே வைகோ விமர்சனம் செய்தார். இதனால் எங்களுக்குள் பிளவு ஏற்பட்டது. இவ்வாறு தமிழிசை சவுந்திர ராஜன் கூறினார்