திருமணத்திற்கு முன் மருத்துவ பரிசோதனை-கவுன்சிலிங். சென்னை ஐகோர்ட் உத்தரவு
முன்பின் தெரியாதவர்களை திருமணம் செய்து கொண்டு திருமணத்திற்கு பின்னர் மணமகன், அல்லது மணமகளுக்கு தீராத நோய், ஆண்மைக்குறைவு போன்ற பிரச்சனைகள் தெரியவருவது குறித்து பல்வேறு புகார்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் திருமணத்திற்கு முன்னரே மணமகன் மற்றும் மணமகளுக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் கவுன்சிலிங் கட்டாயமாக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் இதுகுறித்து விழிப்புணர்ச்சிகளை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருமணத்திற்கு முன்னர் நோய்களை மறைத்த தனது கணவரிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என்று இளம்பெண் ஒருவர் பதிவு செய்த வழக்கு நேற்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த ஐகோர்ட் நீதிபதி என்.கிருபாகரன் தனது உத்தரவில் கூறியதாவது:
இருவரும் நன்கு படித்தவர்கள். திருமணம் முடித்து சில மாதங்களிலே விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளனர். திருமணம் முடிந்து தேனிலவுக்குப் போனபோதுதான் கணவர் நோய் வாய்ப்பட்டவர் என அந்தப் பெண்ணுக்கு தெரியவருகிறது. ஏராளமான கனவுகளுடன் திருமண பந்தத்துக்குள் நுழைந்த அப்பெண்ணுக்கு ஏமாற்றம் ஏற்பட்டிருக்கிறது. பிறகு மருத்துவப் பரிசோதனை செய்தபோதுதான் அவளது கணவனுக்கு இதயத்தில் ஓட்டையும், காலில் தொடைப் பகுதியில் புற்றுநோயும் இருப்பது தெரியவந்துள்ளது. இனிமேலும் அவரால் இல்லற வாழ்வில் ஈடுபட முடியாது என்று உறுதியாக தெரிந்த பிறகு வேறுவழியில்லாமல் விவாகரத்து முடிவுக்கு வந்த அந்தப் பெண் நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்.
இதய நோய் மற்றும் புற்றுநோய் இருப்பதை மறைத்து திருமணம் செய்து கொண்டதால் அந்த திருமணம் செல்லாது என அறிவிக்கக் கோரியுள்ளார்.
அவளது கணவருக்கு புற்றுநோய் இருப்பது மருத்துவப் பரிசோதனை அறிக்கை மூலம் தெரியவருகிறது. இந்நிலையில், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கும் அந்தப் பெண்ணுக்கு அநீதி இழைக்க இந்த நீதிமன்றம் விரும்பவில்லை. அந்தப் பெண்ணின் எதிர்கால வாழ்க்கையைக் கருத்தில் கொண்டு அவரது மனு ஏற்கப்பட்டு, அந்த திருமணம் செல்லாது என அறிவிக்கப்படுகிறது. அவரது கணவர் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
எனவே, திருமணத்துக்கு முன்பு மருத்துவ நிபுணர்களைக் கொண்டு மணமக்களுக்கு மருத்துவப் பரிசோதனை மற்றும் கவுன்சலிங் நடத்த வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊடகங்களில் விளம்பரம், குறும்படம், கல்லூ களில் கருத்தரங்கம் உள்ளிட்டவை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று தனது உத்தரவில் நீதிபதி என்.கிருபா கரன் தெரிவித்துள்ளார்.