அகில இந்திய மருத்துவ மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான மறு நுழைவுத் தேர்வு ஜூலை 25-ஆம் தேதி நடைபெறும் என மத்திய பள்ளிக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) செவ்வாய்க்கிழமை அறிவித்தது.
சிபிஎஸ்இ சார்பில் நாடு முழுவதும் அகில இந்திய மருத்துவம், பல் மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு, கடந்த மே மாதம் 3-ஆம் தேதி நடைபெற்றது.
இந்த தேர்வுக்காக தயார் செய்யப்பட்டிருந்த வினாக்களுக்குரிய விடைகள், செல்லிடப்பேசிகள் மூலம் கசிந்ததாக புகார் எழுந்தது.
இதுதொடர்பாக 4 பேரை ஹரியாணா போலீஸார் கைது செய்தனர். இந்த முறைகேட்டின் மூலம் பலர் பயனடைந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
அதையடுத்து இந்த தேர்வு முடிவுகளை நிறுத்தி வைக்குமாறும், மறுதேர்வு நடத்த உத்தரவிடுமாறும் உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் சிலர் மனு தாக்கல் செய்தனர்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், தேர்வு முடிவுகளை நிறுத்தி வைத்ததுடன், அகில இந்திய மருத்துவப் படிப்புகளுக்கு மறு நுழைவுத்தேர்வு நடத்துமாறு சிபிஎஸ்இ-க்கு உத்தரவிட்டது.
மேலும், இந்த தேர்வு முடிவுகளை ஆகஸ்ட் 17-ஆம் தேதிக்குள் வெளியிடவும் அறிவுறுத்தப்பட்டது.
இதன்படி, அகில இந்திய மருத்துவப் படிப்புகளுக்கான மறு நுழைவுத் தேர்வு ஜூலை 25-ஆம் தேதி நடத்தப்படும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
“”இந்த மறுநுழைவுத் தேர்வில் புதிய மாணவர்கள் யாரும் பங்கேற்க முடியாது.
ஏற்கெனவே தேர்வு எழுதிய மாணவர்கள், நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்கும்போது குறிப்பிட்டிருந்த தங்கள் மின்னஞ்சல் முகவரியை பயன்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
மறுதேர்வு தொடர்பான தகவல்கள் www.aipmt.nic.in என்ற இணையதள முகவரியில் பதிவேற்றம் செய்யப்படும்” என சிபிஎஸ்இ விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.