நொச்சியின் மருத்துவ பயன்கள்

images

நொச்சியில் வெண் நொச்சி, கருநொச்சி, நீர் நொச்சி எனப் பல வகைகள் உள்ளன.  கருநொச்சி ஒரு கற்பக மூலிகை என்பதைத் தாண்டி, மருத்துவ உலகில் அதற்கு வேறு காரணம் இல்லை. ஆனால், சாதாரண நொச்சியே அசாதாரண மருத்துவக் குணமுடையது. 

அம்மை நோய் வந்தவருக்கு வேப்பிலையை நீரில் போட்டுக் குளிப்பாட்டுவதுபோல, சமீபத்தில் அம்மாவான பிரசவித்த மகளிரையும் அவர்களைப் பல நோய்களில் இருந்தும் காக்கும்விதமாக, அவர்கள் குளிக்கும் வெந்நீரில் நொச்சி இலையைப் போட்டுக் குளிப்பாட்டுவது உண்டு. பேறுகாலத்துக்குப் பின்னர் தாயின் உடல், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவும் உடல் வலியுடனும் இருக்கும். ஆதலால், நொச்சிக் குளியல் பேருதவியாக இருக்கும்.

சளிப் பிடிக்கும் தருவாயில், அந்தக் காலத்து முதல் மருந்து, நொச்சி இலையைப் போட்டு ஆவி பிடிப்பதுதான். மூக்கில் நீரேற்றமுடன் தலைவலியும் சேர்ந்து வரும் சைனசைடிஸ் பாதிப்பு உள்ளவர்களுக்கு, நொச்சி இலை ஆவி பிடிப்பது உள் மருந்து இல்லாமல் உடனடி  நிவாரணம் செய்யும் மருத்துவமுறை. ஃப்ளு எனப்படும் வைரஸால் ஏற்படும் வாத ஜுரம் இந்த ஆவி பிடிக்கும் முறையால் குணமாகும். கூடுதல் பயனாக உடல் வலியையும் நீக்கும். ‘நொச்சி இலையைத் தலையணைக்கு அடியில் வைத்துப் படுத்தாலே, தலைவலியும் போகும்’ என்கிறது சித்த மருத்துவம்.

சைனசைடிஸ் உடன் வரும் தீவிர தலைவலி, கூடவே கழுத்தில் நெறிகட்டி வரும் நுரையீரல் சளி, தொண்டை நோய்கள், டான்சலைடிஸ் அத்தனைக்கும் தலைமுழுகுத் தைலமாக நொச்சித் தைலத்தைப் பயன்படுத்தலாம். நொச்சி இலைச் சாறு 200 மி.லி., நல்லெண்ணெய் 200 மி.லி-யை அடுப்பில் வைத்து, நீர் வற்றும் வரை காய்ச்சிப் பெறும் தைலம்தான் நொச்சித் தைலம்.

வயிறு உப்புசத்துடன் மாந்தம் பிடித்து இருக்கும் குழந்தைகள் சரியாகச் சாப்பிட மாட்டார்கள். அவர்களுக்குச் சரியாக செரிமானம் ஆகி மலம் கழியாது. அந்தக் குழந்தைகளுக்கு, நொச்சி, நுணா, வேலிப்பருத்தி இலைகளை வகைக்கு ஒரு கைப்பிடி எடுத்து,  அரை லிட்டர் தண்ணீர் ஊற்றி, 60 மி.லி-யாகக் காய்ச்சி, பொழுதுக்கு 30 மி.லி அளவு சாப்பிடக் கொடுக்க மாந்தமும் சளியும் போய், குழந்தைக்குப் பசி இயல்பாக வரத் தொடங்கும்.

குழந்தைப்பேறில்லாத மகளிருக்கு, கருமுட்டை வளர்ச்சியை ஊக்குவித்து, சரியான நாளில் முட்டையை சினைப்பாதையில் தள்ளும் நிலைக்கு இந்த மூலிகை உதவுவதாக, சமீபத்திய சித்த மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

நொச்சி, மூட்டு வலிக்கு ஓர் அமிர்த மூலிகை. நொச்சித்தழையை ஆமணக்கு எண்ணெயில் வதக்கி, வலி வீக்கம் உள்ள மூட்டில் ஒத்தடமிட, மூட்டு வலி உடனடியாகக் குறையும். தொடர்ச்சியான சிகிச்சையில் நோயும் மெள்ள மெள்ள அகலும்.

பொதுவாக, இரைப்பு எனும் ஆஸ்துமா உள்ளவருக்கு, வயிற்றில் மாந்தமும் இரைப்புடன் சேர்ந்து இருக்கும். நொச்சி, மிளகு, பூண்டு, லவங்கம் சிறிது அளவாகச் சேர்த்து மென்றால், இரைப்பு நோயின் எழுச்சி உடனே அடங்கும்.

Leave a Reply