பீர்க்கங்காயில் பொதிந்துள்ள மருத்துவப் பொருட்கள்

download (8)
100 கிராம் எடையுள்ள பீர்க்கங்காயில் சுண்ணாம்புச்சத்து 18 மி.கி. அளவும், மாவுச்சத்து 3 கிராம் அளவும், எரிசக்தி 17  கலோரியும், பாஸ்பரஸ் 26 மி.கி. அளவும் உள்ளது. வைட்டமின் பி2, வைட்டமின் சி, கரோட்டீன், நியாசின், இரும்புச்சத்து,  அயோடின் மற்றும் ஃபுளோரின் ஆகியவற்றையும் உள்ளடக்கியதாகப் பீர்க்கங்காய் விளங்குகிறது.

பீர்க்கங்காய் இனிப்புச் சுவையுடையது என்பது மட்டுமின்றி எளிதில் ஜீரணமாகக் கூடியதாகவும் விளங்குகிறது. உடலுக்குக்  குளிர்ச்சி தரும் பீர்க்கங்காய், மிகக் குறைந்த அளவேயான கொழுப்புச் சத்தைக் கொண்டிருக்கிறது. இதனால், உடல் எடையைக்  குறைக்க விரும்புவோர்க்கு நல்ல உணவாக அமைகிறது. இதில் மிகுந்த நீர்ச்சத்து இருப்பதும் எடை குறைவதற்கு முக்கிய  காரணமாக அமைகிறது.

பீர்க்கங்காயின் சாறு மஞ்சள் காமாலை நோய்க்கும் அருமருந்தாக உதவுகிறது. பீர்க்கங்காயை அரைத்துப் பெறப்பட்ட சாறு அல்லது காய்ந்த பீர்க்கங்காயின் விதை மற்றும் சதைப்பகுதியின் சூரணம் மஞ்சள் காமாலை நோயை மறையச் செய்யும்  இயற்கை மருந்து என்றால் மிகையில்லை.பீர்க்கங்காயில் ரத்தத்தைச் சுத்தப்படுத்தக்கூடிய வேதிப் பொருட்களும் மிகுந்துள்ளன.  குறிப்பாக, மது அருந்துகிறவர்களுக்கு மதுவினால் ஏற்படும் நச்சுக்களை ரத்தத்தில் இருந்து அகற்ற பீர்க்கங்காய் உதவும். ரத்தம்  சுத்தமாவதோடு கெட்டுப் போன ஈரலைச் சீர் செய்து மீண்டும் புத்துணர்வோடு செயல்படவும் பீர்க்கங்காய் கை கொடுக்கிறது.

குறைந்த அளவு எரிசக்தி கொண்ட உணவாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவாக விளங்குகிறது.  பீர்க்கங்காயில் இருக்கும் பெப்டைட்ஸ், ஆல்கலாப்ட்ஸ், சோன்டின் போன்ற வேதிப்பொருட்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை  அளவைக் குறைக்க உதவுகின்றன. பீர்க்கங்காயில் உள்ள அதிகமான நார்ச்சத்து மலச்சிக்கலைப் போக்குவதற்கு உதவுகிறது. அது  மட்டுமின்றி மூல நோய்க்கும் முக்கிய மருந்தாக பீர்க்கங்காய் விளங்குகிறது.

பீர்க்கங்காய் முற்றி காய்ந்த நிலையில் கூடு போன்ற நார்ப்பகுதியைப் பெற்றிருக்கும். இந்த நார் கொண்டு உடலைத் தேய்த்துக்  குளிப்பதால் தோல் ஆரோக்கியத்தையும், பளபளப்பான தன்மையையும் பெறும். தோலின் மேலுள்ள பருக்கள் விரைவில்  குணமாகவும் உதவி செய்கிறது. உடலின் துர்நாற்றத்தைப் போக்கவல்ல மருத்துவ குணத்தையும் பீர்க்கங்காயின் நார் பெற்றிருக்கிறது.

ஹோமியோபதி மருத்துவத்தில் பீர்க்கங்காயின் சாறு கல்லீரல், மண்ணீரல் ஆகியவற்றில் ஏற்படும் பல்வேறு நோய்களுக்கும்  மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. உணவுப்பாதையின் உட்புறப் பகுதிகளில் ஏற்படும் எரிச்சல் மற்றும் வீக்கத்தைப் போக்குவதற்கும் பீர்க்கங்காய் சாறு பயன்படுத்தப்படுகிறது. மத்திய சித்த ஆயுர்வேத ஆய்வுக்கழகம் பீர்க்கங்காயின் இலை, காய், வேர்  போன்றவற்றில் இருந்து பெறப்படும் சாற்றை தினமும் 20 மி.லி. வரையில் ஒரு வேளைக்கான மருந்தாக உட்கொள்வது  பலவிதங்களிலும் நல்லது என பரிந்துரை செய்திருக்கிறது. பீர்க்கங்காயை நன்கு உலர்த்திப் பொடித்து நன்கு சலித்து வைத்துக்  கொண்டு மூக்குப்பொடி போல மூக்கிலிட்டு உறிஞ்சுவதால் மஞ்சள் காமாலை நோய் மறையும் எனவும் ஆயுர்வேதம்  குறிப்பிடுகிறது.

Leave a Reply