சளி, காய்ச்சல், இருமலுக்கான மருந்து

482-350x250

சளி, காய்ச்சல், இருமலை போக்க கூடியதும், தோல்நோய்களுக்கு மருந்தாக அமைவதும், பொடுகு தொல்லை, வெண்குஷ்டத்தை சரிசெய்ய கூடியதும், வயிற்று கோளாறை போக்கவல்லதும், புழுக்களை வெளித்தள்ள கூடியதும், வலி, வீக்கத்தை குறைக்க கூடியதுமான கோடக சாலையின் மருத்துவ பயன்களை அறிவோம்.

கோடக சாலை சிறிய நீல நிற பூக்களை உடையது. எலியின் காது போன்ற மிகச்சிறிய இலையை கொண்டது. படர் கொடியாக தரையோடு தரையாக இருக்கும். மரிக்கொழுந்து செடியை போன்று காணப்படும். ஆற்றங்கரையோரம், மலைப்பகுதியில் இந்த செடி வளரும். கோடக சாலை செடி நோய் எதிர்ப்பு சக்திமிக்கது. தோல்நோய்களுக்கு மருந்தாகிறது. பொடுகுவை போக்குகிறது.
கோடக சாலை செடியை பயன்படுத்தி சளி, காய்ச்சல், இருமலுக்கான மருந்து தயாரிக்கலாம்.

வேர் முதல் பூக்கள் வரை அனைத்தும் மருந்தாகிறது. இந்த செடியை ஒரு கைப்பிடி அளவுக்கு எடுக்கவும். அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி காலை, மாலை வேளைகளில் குடிக்கும்போது சளி, இருமல், காய்ச்சல் சரியாகும். மூட்டுகளில் ஏற்படும் வலி, வீக்கம் குணமாகும். கோடக சாலை செடியானது வியர்வையை தூண்டி காய்ச்சலை சரிசெய்யும். சளியை கரைத்து இருமலை போக்கும். வயிற்றில் இருக்கும் பூச்சிகளை வெளித்தள்ளும் தன்மை கொண்டது. சிறுநீரை பெருக்கி வீக்கத்தை கரைக்கும்.

கோடக சாலை செடியை கொண்டு வெண்குஷ்டம், புழுவெட்டுக்கான மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். விளக்கெண்ணெயுடன், கோடக சாலை இலை பசை மற்றும் விதைகள், பூக்களை சேர்த்து தைலப்பதத்தில் காய்ச்சவும். இதை பூசுவதால் தோல்நோய்கள் சரியாகிறது. தலையில் மாவுபோல உதிர்வது, தலையில் அரிப்பு, முடிகொட்டுவது, பொடுகு பிரச்னையை சரிசெய்கிறது. பால்வினை நோய்களால் ஏற்படும் புண்களை குணமாக்குகிறது.

கோடக சாலை செடியை பயன்படுத்தி வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்றும் மருந்து தயாரிக்கலாம். கால் ஸ்பூன் காட்டு சீரகம், கோடக சாலை செடியுடன் ஒரு டம்ளர் நீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். வடிகட்டி தேன் சேர்த்து 4 வாரம் குடிப்பதால் வயிற்று புழுக்கள் வெளியேறும். கோடக சாலை செடியானது உள்மருந்தாக எடுக்கும்போது வயிற்று பூச்சிகள், கிருமிகள் வெளியேறும். உடலில் ஏற்படும் அரிப்பு, தடிப்பு ஆகியவற்றை சரிசெய்யும். வயிற்றுக் கோளாறு சரியாகும்.

சிறுநீர் பெருக்கத்தை சீர்செய்கிறது. கணுக்கால்களில் நீர்தேங்கி வலி ஏற்பட்டால், கோடக சாலை செடியை தேனீராக்கி குடிப்பதால் வலி சரியாகும். அரிதான மூலிகையான இதன் தண்டுப் பகுதியை நட்டு வைக்கலாம். விதைகள் மூலம் செடி உண்டாக்கலாம். பூஞ்சை காளான்களை அழிக்கும் தன்மை கொண்ட கோடக சாலையால், வாய் புண்கள் முதல் அனைத்து புண்களும் சரியாகும். பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட இந்த செடி கை, கால்களில் ஏற்படும் வீக்கம், வலிக்கு மருந்தாகிறது.

Leave a Reply