சமீப காலமாக, உடல் ஆரோக்கியத்தைப் பற்றிய விழிப்புஉணர்வு மக்கள் மத்தியில் அதிகமாக ஏற்பட்டுள்ளது. நோய் வந்த பிறகு சிகிச்சை பெறுவதைவிட, வரும் முன் காப்பதில் அதிக கவனத்தைச் செலுத்த ஆரம்பித்துள்ளனர். வாழ்நாள் முழுக்க மாத்திரை, மருந்து, சிகிச்சைகளுடன் வாழ்வதற்குப் பதில் எளிய பயிற்சிகள், சிகிச்சைகள் மூலம் நிவாரணம் கிடைக்குமா எனத் தேடிக்கொண்டே இருக்கின்றனர். `அப்படிப்பட்ட சிகிச்சைகளும் உள்ளன’ என்கிறது நம்முடைய மருத்துவம். இங்கிருந்து சென்ற ரெய்கி, அக்குபஞ்சர், யோகா போன்ற மருத்துவமுறைகளை வெளிநாடுகளில் கொண்டாடுகின்றனர். உலக சுகாதார நிறுவனம், அமெரிக்காவின் எஃப்.டி.ஏகூட அக்குபஞ்சரை அங்கீகரித்துள்ளன. ஆனால், இந்தியாவில் இப்போதுதான் இதுபோன்ற நம்முடைய பாரம்பர்ய மருத்துவமுறைகளைப் பற்றிய புரிதல் ஏற்பட்டிருக்கிறது.
மனித உடல் ஒரு தானியங்கி எந்திரம். உடலில் நம் கண்களுக்குப் புலப்படுவதைத் தாண்டி, நம் கண்களுக்குப் புலப்படாத ஒளிவட்டம் (ஆரா) இருக்கிறது. இந்த ஒளிவட்டம், நம்மையும், நம்மைச் சுற்றி இருக்கும் இயற்கையையும் பிணைக்கும் பாலம். கண்களுக்குப் புலப்படாத இந்த ஒளிவட்டத்தில், ஏழு முக்கியச் சக்கரங்கள் உள்ளன. நாம், நாசி துவாரங்கள் மூலம் மட்டுமே சுவாசிப்பது இல்லை. இந்தச் சக்கரங்கள் மூலம் உலகத்தின் பிரபஞ்ச சக்தி, நம் உடலின் உயிர்ச் சக்தியுடன் இணைகிறது. இந்தப் பிணைப்பு தடையின்றி இருந்தால், உடல், இயற்கையுடன் ஒன்றி, ஆரோக்கியமாக இருக்கும். ‘அண்டத்தில் இருப்பதுவே பிண்டத்தில் இருக்கும்’ என்பதன் பொருள் இதுவே.
சஹஸ்ராரா (பீனியல் சுரப்பி), ஆக்ஞா (பிட்யூட்டரி), விஷுத்தி (தைராய்டு, பாரா தைராய்டு), அனாஹதா (தைமஸ்), மணிபூரகம் (கணையம்), ஸ்வாதிஷ்டானா (விதைப்பை, கருப்பை), மூலாதாரம் (அட்ரினல்) என உடலின் ஏழு சக்கரங்களை நாம் நாளமில்லாச் சுரப்பிகளுடன் இணைக்கலாம். பிரபஞ்ச சக்தி, சக்கரங்கள் வழியாக, இந்த நாளமில்லாச் சுரப்பிகளை அடைகிறது.
நமக்கு அறிமுகமான ஒரு சொல் ஹார்மோனல் இம்பேலன்ஸ் (Hormonal imbalance). இது என்ன? பிரபஞ்ச சக்தி, சக்கரங்கள் வழியாக சுரப்பிகளை முழுமை யாகச் சேராதபோது, சுரப்பிகளின் இயக்கம் தடைப்படுவதைத்தான் இப்படிச் சொல்கிறோம். இந்த ஏழு சுரப்பிகளும் சமநிலையில் இயங்கும்போது, நாளமில்லாச் சுரப்பிகளில் சுரப்பு சரியாக இருக்கும்போது, உடல் ஆரோக்கியமாக இருக்கும். உடல் சக்தி, பிரபஞ்ச சக்தியுடன் ஒருங்கிணையாதபோது, உடல் நலம் குறைகிறது. இது சரியானால், மீண்டும் உடல் நலம் பெறுகிறது.
`ரெய்கி’ என்பது ஜப்பானில் இருந்து வந்த மருத்துவம் என்று பலரும் எண்ணிக்கொண்டிருக் கின்றனர். ஆனால், அது இங்கிருந்துதான் சென்றது. நம்முடைய ஏழு சக்கரங்களை அடிப்படையாகக் கொண்டதுதான் ரெய்கி. ரெய் (பிரபஞ்ச சக்தி), கி (உயிர் சக்தி) என்பதே இதன் பொருள். அதாவது, இந்த ஒளிவட்டத்தில், ஏழு முக்கியச் சக்கரங்கள் உள்ளன. இந்தச் சக்கரங்கள் மூலம் உலகத்தின் பிரபஞ்ச சக்தி, நம் உடலின் உயிர்ச் சக்தியுடன் இணைகிறது. இந்த ஓட்டம், தடையின்றி இருந்தால், உடல், இயற்கையுடன் ஒன்றி ஆரோக்கியமாக இருக்கும். ரெய்கி சிகிச்சை என்பது, உடல்நலம் இல்லாதவரின் எந்தச் சக்கரத்தில் சக்தித் தடை என அறிந்து, அந்தத் தடையை விலக்கி, எல்லா சக்கரங்களும் சமநிலையில் இயங்கச் செய்வதாகும்.
இதைப்போல, இன்னொரு சிகிச்சைமுறை – சுஜோக் அக்குபஞ்சர் (Sujok Acupuncture). நம் உடலின் எல்லா பாகங்களையும் தத்ரூபமாகப் பிரதிபலிப்பது நம் உள்ளங்கை (ஸு), பாதங்கள் (ஜோக்). இதன் தத்துவமும், உடலில் சக்தி செல்லும் பாதையும், சக்தியின் தடையில்லா ஓட்டத்தையும் சார்ந்தது. இதில், உடல் பிரச்னைக்கு ஏற்ப, உள்ளங்கையில் அதனோடு தொடர்புடைய புள்ளியை அழுத்தினாலே நிவாரணம் கிடைக்கும்.