பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் மம்தாவின் மெகா கூட்டணி. அதிமுக இணையுமா?

பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் மம்தாவின் மெகா கூட்டணி. அதிமுக இணையுமா?

mamthaபாஜகவின் மத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஏற்படுத்தவுள்ள தேசிய அளவிலான மெகா கூட்டணிக்கு காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் ஆதரவு கொடுத்துள்ளதாகவும், இன்னும் ஒருசில மாநில கட்சிகள் ஆதரவு கொடுக்க தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த கூட்டணியில் அதிமுக இணையுமா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

மாநில அரசியலை அடுத்து மீண்டும் தேசிய அரசியலை கையில் எடுத்துள்ள முதல்வர் மம்தா பானர்ஜி தனது மெகா கூட்டணி குறித்து கூறியதாவது:

இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மைக்கு பாஜக, ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளின் மத அரசியல் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவுக்கு எதிராக தனித்தனியாகப் போராடிக் கொண்டிருக்கிறோம்.
கூட்டாட்சித் தத்துவத்தைப் பாதுகாக்க, ஒத்த கருத்து கொண்ட கட்சிகள் எங்களுடன் இணைந்தால் அதை வரவேற்போம் என்று கூறியுள்ளார்.

முன்னாள் ராணுவ வீரர் தற்கொலை தொடர்பாக போராட்டம் நடத்தி கைது செய்யபட்ட ராகுல் காந்தி, அர்விந்த் கேஜரிவால் ஆகியோர் கைது செய்யப்பட்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த மம்தா, என்டிடிவிக்குத் தடை போன்ற விவகாரங்களுக்காக மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.

இந்தச் சூழலில், பாஜகவுக்கு எதிரான மாபெரும் கூட்டணியை அமைப்பதற்கான மம்தா பானர்ஜியின் யோசனையை காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், சமாஜவாதி கட்சி, ஆம் ஆத்மி கட்சி ஆகியவை வரவேற்று முழு ஆதரவு தருவதாக உறுதி அளித்துள்ளன

2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு மம்தா பானர்ஜி தலைமையில் உருவாகவுள்ள இந்த மாபெரும் கூட்டணிக்கு அதிமுக உள்பட இன்னும் சில கட்சிகள் ஆதரவு அளிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Leave a Reply