திருக்கோவலூர் என்று சொல்லப்படும் திருக்கோவிலூரில், மலையமான் குலத்தைச் சேர்ந்த அந்த மன்னர் மெய்யனார், சேதி எனும் நாட்டை ஆட்சி செய்து வந்தார். மிகுந்த சிவபக்தர். செல்வங்களையெல்லாம் சேகரித்து வைத்து பூட்டிக் கொள்ளாமல், தன் மக்களுக்கும் குறிப்பாக சிவனடியார்களுக்கும் வாரி வழங்கி வந்தார்.
மெய்யனாரின் ஆட்சியை சீர்குலைத்து, அவரை அழித்துவிட்டு, தேசத்தைக் கைப்பற்ற வேண்டும் என அடுத்த தேசத்து மன்னனான முத்தநாதன் என்பவன் திட்டமிட்டான். மெய்யனாரின் சிவபக்தியை அறிந்து வைத்திருந்தவன், சிவனடியாரைப் போல வேடமணிந்து கொண்டு, அவருடைய அரண்மனைக்கு வந்தான்.
சிவனடியார் வந்திருக்கிறார் என அறிந்ததும் ஓடோடி வந்து வரவேற்றார் மெய்யனார். நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினார். ‘‘ஆகம நூல்களை தங்களுக்கு அறிமுகம் செய்து வைத்து, ஆகம விதிகளை உங்களுக்கு விரிவாக எடுத்துச் சொல்லவே வந்தேன்’’ என்று அடியார் வேடத்தில் வந்த எதிரி மன்னன் சொல்ல… சிந்தை மகிழ்ந்தார் மெய்யனார்.
அப்போது, ஒளித்து வைத்திருந்த வாளால் மன்னரை வெட்டிச் சாய்த்தான். அப்போதும் கூட மெய்யனார் அதிரவில்லை. ‘மெய்த்தவ வேடமே மெய்ப்பொருள்’ என வணங்கினார். அதாவது, மெய்த்தவ வேடத்தில் அணிந்து வைத்திருப்பவரே உண்மையான மெய்ப்பொருள் என கடவுள் என்று நினைத்து வேண்டினார்.
சிவனடியாரின் வேடத்தில் வந்து, மன்னரை வெட்டியவனை வீரர்கள் சூழ்ந்து கொண்டு தாக்க முனைந்தார்கள். அவனுடைய வேஷம் கலைந்தது. எதிரி தேசத்து மன்னன் என அறிந்து இன்னும் கொந்தளித்தார்கள். அப்போது உயிர் போகும் தருணத்தில் துடித்துக் கொண்டிருந்த மெய்யனார், ‘அவனை விட்டுவிடுங்கள். அவன் நமர் (நமசிவாயர்)’’ என்று சொல்லியபடி விழுந்தார்.
அப்போது மெய்யனாருக்கு உயிர் தந்த சிவபெருமான், அங்கே அவருக்கு பார்வதிதேவியுடன் ரிஷாபாரூடராகக் காட்சி தந்தார். அத்துடன் தன் உண்மையான பக்தனை, ஆட்கொண்டருளினார் என்கிறது பெரியபுராணம்.
தேசத்து மன்னராகவும் சிவபக்தியுடனும் திகழ்ந்த அந்த மன்னர் மெய்யனார், அதையடுத்து மெய்ப்பொருள் நாயனார் எனும் பெயர் பெற்று போற்றப்பட்டு வருகிறார்!