மத்திய உள்துறை அமைச்சருடன் பில்கேட்ஸ் மனைவி சந்திப்பு

மத்திய உள்துறை அமைச்சருடன் பில்கேட்ஸ் மனைவி சந்திப்பு
melinda gates
மைக்ரோசாப்ட் சாப்ட்வேர் உற்பத்தி நிறுவன உரிமையாளர் பில் கேட்ஸ் அவர்களின் மனைவி மெலிண்டா கேட்ஸ், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களை நேரில் சந்தித்துப் பேசினார். சுமார் 20 நிமிடங்கள் நடைபெற்ற இந்த சந்திப்பில் பில்கேட்ஸ்-மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் இந்தியாவில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து அவர் விளக்கியதாக தெரிகிறது. மேலும் பில்கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் நடத்தப்படும் அனைத்து தொண்டுகளுக்கும் மத்திய அரசு உறுதுணையாக இருக்கும் என மெலிண்டா கேட்ஸிடம் ராஜ்நாத் சிங் உறுதி அளித்ததாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பில்கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் போலியோ நோயை அறவே ஒழிக்க கடந்த ஆண்டுகளில் 1.8 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவு செய்துள்ளது. இந்த அறக்கட்டளைகளுக்கு நன்கொடையாக 28 பில்லியன் அமெரிக்க டாலர்களும், உலக சுகாதார மேம்பாட்டுக்காக 8 பில்லியன் அமெரிக்க டாலர்களும் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் சில முக்கிய மாநிலங்களில் சுகாதாரம், விவசாயம், கிராமப்புற மேம்பாடு ஆகிய துறைகளின் மேம்பாட்டிற்காக பில்கேட்ஸ் அறக்கட்டளை ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், இந்தியா வந்துள்ள மெலிண்டா கேட்ஸ் புதுடெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேற்று சந்தித்துப் பேசினார். இந்தியாவில் உள்ள மிகவும் பின்தங்கிய பகுதிகளில் கல்வி, குழந்தைகள் மற்றும் பெண்கள் மேம்பாடு வளர்ச்சியடையும் நோக்கத்தில் தங்களது தொண்டு நிறுவனத்தின் சார்பில் செயல்படுத்தவுள்ள புதிய திட்டங்கள் தொடர்பாகவும் அவர் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த சந்திப்பால் மேலும் பல பணிகள் பில்கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் நடைபெறும் என தெரிகிறது.

Leave a Reply