தமிழகத்தில் மீத்தேன் திட்டம் ரத்து. அரசியல் தலைவர்கள் வரவேற்பு
தமிழகத்தில் திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் சுமார் 1.75 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களில் மீத்தேன் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு முடிவு செய்திருந்த நிலையில் விவசாயிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக மீத்தேன் திட்டம் ரத்து செய்யப்படுவதாக பெட்ரோலியத் துறை இணையமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது.
மத்திய அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்பட பல அரசியல் தலைவர்கள் வரவேற்றுள்ளனர். கடந்த திமுக ஆட்சியின்போது மு.க.ஸ்டாலின் தான் மீத்தேன் திட்டத்திற்கு ஆதரவு கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து நேற்று தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கான பகுதிகளை ஒதுக்கீடு செய்வதில் சில பிரச்னைகள் எழுந்தன. இது தவிர அத்திட்டத்துக்கு ஆட்சேபம் தெரிவித்து உள்ளூர் விவசாயிகள் தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டு போராட்டங்கள் நடத்தப்பட்டன. எனவே, அத்திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது’ என்று கூறினார்.