வெந்தயம், மருத்துவ குணாதிசயங்கள் நிறைந்தது. பலவிதமான சத்துக்கள் அதில் நிறைந்திருக்கின்றன. இந்தியாவில் பயன்படுத்தும் மசாலாக்களில் இது முக்கியத்துவம் பெற்றது. தலையில் தோன்றும் பொடுகு முதல் சர்க்கரை நோய்க்கு வரை இது மருந்தாகிறது. உடலில் அதிகரிக்கும் பித்தம், ரத்த அழுத்தம், ஜுரம், தீராத இருமல் போன்றவற்றை சரிசெய்யும் சக்தி வெந்தயத்தில் இருக்கிறது.
வெந்தயம் உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. வயிற்று வலி, அஜீரணம், வயிற்றுபோக்கு போன்றவற்றை குணப்படுத்துகிறது. உடல் சூடு அதிகரிப்பதால் உருவாகும் நோய்களுக்கும், கல்லீரல் நோய்களுக்கும் இது மருந்தாகின்றது. வெந்தயத்தில் 65 சதவீதம் நார்ச்சத்து இருக்கிறது. நீரில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதுவே வெந்தயத்தின் மருத்துவ குணத்தை அதிகரிக்கிறது. இதன் மேல்தோல் நீரில் ஊறும்போது வழுவழுப்புத்தன்மை பெறுகிறது.
இது உடலில் சேரும் கழிவுகளை உள்வாங்கி, ஈர்த்து வெளியேற்றுகிறது. கல்லீரலில் தேங்கும் கொழுப்பையும் நீக்குகின்றது. சர்க்கரையின் அளவையும் சமன்செய்ய உதவுகிறது. ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து, இதயம் நன்கு செயல்பட உதவுகிறது. மலச்சிக்கலையும் நீக்குகின்றது. வெந்தயத்தில் உள்ள நார் பொருட்கள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைப்பது ஆய்வுகள் மூலம் உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
இளம்பருவத்தில் பெண்களுக்கு தோன்றும் வெள்ளைப்படுதலை சரிசெய்யவும், மாதவிடாய் காலங்களில் உண்டாகும் வயிற்றுவலியை போக்கவும், பெண்களின் மார்பக வளர்ச்சியை அதிகரிக்கவும் வெந்தயம் துணைபுரிகிறது. அதில் இருக்கும் ‘டயாஸ்ஜெனின்’ என்ற வேதிப்பொருள் பெண்களின் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் போன்று, பெண்களின் உடலுக்கு சக்தி தருகிறது.
பிரசவித்த பெண்கள் வெந்தயத்தை உணவில் சேர்த்து வந்தால் தாய்பால் உற்பத்தி அதிகரிக்கும். வெந்தயத்தில் உள்ள அமிலங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும் துணைபுரிகிறது. இதில் இருக்கும் வைட்டமின் பி, சி மற்றும் இரும்பு, கால்சியம், மாங்கனீஸ் போன்ற சத்துக்கள் ரத்த சோகையை போக்கும் சக்தி நிறைந்தவை.
வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு மறைவதுடன், தலை முடி நன்கு வளரும். முடியும் பளபளப்பாகும். வெந்தயத்தை அன்றாட உணவில் கட்டாயம் சேர்க்கவேண்டும். சர்க்கரை நோயாளிகள் மற்றும் நாற்பது வயதிற்கு மேற்பட்ட பெண்கள் வெந்தயத்தை வறுத்து பொடி செய்து ஒரு தேக் கரண்டி வீதம் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் சர்க்கரையின் அளவு குறையும். ரத்தசோகை நீங்கும். எலும்புகள் பலமாகும். எடை குறையும்.