சென்னையில் உள்ள ஷெனாய் நகரில் கட்டிடம் ஒன்று பூமிக்கு அடியில் திடிரென இரண்டு அடி இறங்கியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள்து.. இந்த அதிர்ச்சி காரணமாக வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்ததாக கூறப்படுகிறது. அந்த பகுதியில் நடைபெறும் மெட்ரோ ரயில் சுரங்கப் பணியால் இந்த சம்பவம் நடந்ததா? என மெட்ரோ ரயில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
திருமங்கலம் – ஷெனாய் நகர் இடையே 5 கி.மீ. தூரம் மெட்ரோ ரயிலுக்கான சுரங்கப்பாதை தோண்டும் பணிகள் சமீபத்தில் முடிவடைந்தது. இந்த பகுதியில் தற்போது தண்டவாளம் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.
மேலும் அவசர கால வழி அமைத்தல், மின்சார உபகரணங்கள் பொருத்துதல் போன்ற பணிகள் தற்போது நடந்து வருகிறது. இந்த பணியில் சுமார் 30க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு சுமார் 11.30 மணி அளவில் ஷெனாய்நகர் புல்லா அவென்யூ சாலையும், 8 வது குறுக்கு தெருவும் சந்திக்கும் இடத்தில் உள்ள இரண்டடுக்கு மாடி கட்டிடம் ஒன்று திடீரென சுமார் 2 அடி அளவுக்கு பூமியில் இறங்கியது. இதையடுத்து மாடி வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடிவந்தனர். அருகில் உள்ள வீடுகளில் வசிப்பவர்களும் பூமியதிர்ச்சி ஏற்பட்டுவிட்டதாக நினைத்து வெளியே ஓடி வந்தனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும், மெட்ரோ ரயில் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து கீழே இறங்கிய கட்டிடத்தை பார்வையிட்டனர். கட்டிட சேதம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது அந்த தெருவில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவ இடத்தில் பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் அப்பகுதியில் மெட்ரோ ரயில் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.