மெட்ரோ ரயில் பணியால் அண்ணா மேம்பாலத்துக்கு ஆபத்தா?
கடந்த சில நாட்களாக சென்னை அண்ணா மேம்பாலம் அருகே திடீர் திடீரென பள்ளம் விழுவது, விரிசல் ஏற்படுவது போன்ற சம்பவங்கள் நடந்து வருவதால் அந்த பகுதியில் செல்லவே வாகன ஓட்டிகள் அச்சமாகி வருகின்றனர். எந்த நேரத்தில் எந்த இடத்தில் பள்ளம் ஏற்படும் என்று தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அண்ணா மேம்பாலத்திற்கும் ஏதாவது பாதிப்பு வருமா? என்று ஒருசிலர் சமூக வலைத்தளங்களில் அச்சம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குநர் பங்கஜ்குமார் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது: “சென்னை அண்ணாசாலையில் மண்ணின் தன்மையை ஆய்வு செய்யாததால் பள்ளம் ஏற்பட்டது என்பதில் உண்மையில்லை. மெட்ரோ ரயில் பணியால் அண்ணா மேம்பாலத்தில் எந்த பாதுகாப்பு பிரச்னையும் இல்லை. அண்ணா மேம்பாலம் முழுமையான பாதுகாப்புடன் உள்ளது.
நேருபூங்கா- சென்ட்ரல்- வண்ணாரப்பேட்டை- சின்னமலை சுரங்கப்பாதை பணி விரைவில் முடியும். அடுத்த ஆண்டுக்குள் மெட்ரோ ரயில் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும். மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையில் பாதுகாப்பு, காற்று, போக்குவரத்து உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. சுரங்கப்பாதைகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டாத வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்.
தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் கூறுகையில், “கோயம்பேடு- நேருபூங்கா சுரங்கப்பாதை பணி பற்றிய ஆவணங்கள் மெட்ரோ ரயில் நிர்வாகம் தாக்கல் செய்துள்ளது. இந்த ஆவணங்களை கொண்டு ஆய்வு செய்த பின்னர் ரயில்வே அனுமதி அளிக்கப்படும்” என்றார்.