சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் மிக வேகமாக நடந்து வருகிறது. கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து அசோக் நகர் வரை மெட்ரோ ரயில்பாதை அமைக்கும் பணி முற்றிலும் முடிவடைந்து சோதனை ஓட்டமும் முடிவடைந்து விட்டது. இந்நிலையில் நகரின் பல இடங்களிலும் சுரங்க ரயில் பாதை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
சென்னை வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரை ஒரு ரயில் பாதையும், சென்ட்ரலில் இருந்து பரங்கிமலை வரை ஒரு ரயில் பாதையும் என இரு வழித்தடங்களில் மொத்தம் 45 கி.மீ. தூரம் மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்படுகிறது.
பச்சையப்பன் கல்லூரியில் இருந்து கீழ்ப்பாக்கம் வரை 325 மீட்டருக்கு சுரங்கம் அமைக்கும் பணி முழுவதுமாக முடிவடைந்துள்ள நிலையில் தற்போது பச்சையப்பன் கல்லூரியில் இருந்து நேரு பூங்கா வரை சுரங்கம் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளன. இதற்காக 200 மீட்டர் நீளம், 20 மீட்டர் அகலம், 23 மீட்டர் ஆழத்துக்கு பள்ளம் தோண்டப்பட்டு, பாதுகாப்பு சுவர்கள் அமைக்கப்பட்டு, கான்கிரீட் தரைத்தளமும் போடப்பட்டுள்ளது
மெட்ரோ ரயில் பணிகள் அனைத்தும் வரும் 2015ஆம் ஆண்டுக்குள் முடிக்கப்பட்டு, 2015 இறுதியில் ரயில்கள் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது.