மேட்டுமகாதானபுரம் மகாலட்சுமி ஆலயம் மகிமைகள்.

mahalakshmi 2அருள்மிகு மகாலட்சுமி ஆலயம் தமிழ்நாட்டில் கரூர் மாவட்டத்தில் கிருஷ்ணராயபுரம் தாலுகா, மேட்டு மகாதானபுரத்தில் உள்ளது. இந்த அம்மன் கோயில் விஜயநகரப் பேரரசின் கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்டது. இத்திருக்கோவிலில் அருள்மிகு மகாலட்சுமி மூலவராக இரண்டு திருக்கரங்களுடன் அமர்ந்த கோலத்தில் எழுந்தருளியுள்ளாள்.

வைணவ சம்பிரதாயப்படி மகாலட்சுமி சிலை தாமரை மலர்மீது அமர்ந்து. நான்கு கரங்களில் கதை, தாமரை, சங்கு, சக்கரம் ஏந்தி காட்சி தருவது மரபு. ஆனால் திருக்கோவில் கருவறையில், தனி பீடத்தில் அமர்ந்த கோலத்தில் கிழக்கு நோக்கி வீற்றிருக்கும் மகாலட்சுமியின் தொன்மை வாய்ந்த கருங்கல் திருவுருவ சிலை உள்ளது.

இத்திருக்கோவில் கருவறையை சுற்றிலும் மூன்று பிரகாரங்கள் அமைந்துள்ளன. இந்தக் கோவிலின் வெளிப் பிராகாரத்தில் பல பரிவார தெய்வங்களை வழிபடுவதற்கான சன்னதிகள் அமைந்துள்ளன. குரும்ப நாயனார் 63 நாயன்மார்களில் ஒருவர். இவர் சிவன் தாள் போற்றும் சிவனடியாராய் சிவத்தொண்டு ஆற்றி வந்தார்.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் மீது அன்புகொண்டு வணங்கி வந்ததால் இவருக்கு அட்டமாசித்திகள் கிடைத்தன. இந்த நேரத்தில் சுந்தரமூர்த்தி நாயனாரை சிவபெருமான் கைலாயத்திற்கு அழைக்க எண்ணினார். இதனை அறிந்த குரும்ப நாயனார், தம் குருவை பிரிந்து எவ்வாறு வாழ்வது என்று வருந்தினார்.

தன் குருவுக்கு முன்னதாக யோகநெறியின் மூலம் சிவபெருமானின் திருவடியை சேர்வேன் என உறுதி பூண்டார். அதன்படியே சிவலோகத்திற்கும் சென்று சிவனின் திருவடியின்கீழ் அமர்ந்தார். பெரியபுராணத்தில் இந்த வரலாறு கூறப்பட்டுள்ளது. அன்னை ஆதிமகாலட்சுமி அம்பாள் குரும்ப நாயனாரின் குலதெய்வம் ஆவார்.

அசுரர்களும் தேவர்களும் பாற்கடலைக் கடைந்தபோது உதித்தவள் அன்னை ஆதிமகாலட்சுமி. அப்போது திருமால் அமிர்தத்தை தேவர்களுக்கும், விஷத்தை அசுரர்களுக்கும் பகிர்ந்து கொடுத்துக் கொண்டிருந்தார். அந்தகாசூரன் என்ற அசுரன் இதை தனது ஞானத்தால் உணர்ந்து விஷத்திலிருந்து தப்பிக்க எண்ணி ஓடிச்சென்றான்.

அப்போது அன்னை மகாலட்சுமியைப் பார்த்து அவள் மீது மோகம் கொண்டு அருகில் சென்றான். அசுரனிடமிருந்து தப்பிக்க மகாலட்சுமி காவிரிக்கரை வழியாக ஓடினாள். அசுரனும் விரட்டி வந்தான். அப்போது ஆடு மேய்க்கும் குரும்ப இனத்தவர்கள் மேட்டு மகாதானபுரம் என்ற இடத்தில் தங்கள் தொழிலை செய்து கொண்டிருந்தார்கள்.

மகாலட்சுமி அசுரனிடமிருந்து தப்ப குரும்பர் இனத்தவர் இருந்த இடத்தில் பூமிக்குள் ஒளிந்துகொண்டாள். அந்த இடத்தில் சிவபக்தனான ராவணன் ஈசனை நினைத்து தவமிருந்து கொண்டிருந்தான். மகாலட்சுமி அங்கு ஒளிந்திருப்பதை அறிந்த ராவணன் தன்னை அழிப்பதற்கே அவள் வந்திருக்கிறாள் என கருதி இலங்கைக்கு சென்றுவிட்டான்.

மகாலட்சுமி குரும்பர்கள் கறக்கும் ஆட்டுப்பாலை அவர்கள் அறியாமலேயே குடித்துவந்தாள். இதை மக்கள் ஆச்சரியத்துடன் கவனித்தனர். ஒரு இடத்தில் ஈரமாக இருந்ததை பார்த்த மக்கள் அந்த இடத்தை தோண்டினர். அப்போது மகாலட்சுமி சுயம்புவாக காட்சிதந்து அசுரனிடமிருந்து தன்னை காக்க வேண்டுமென கேட்டுக் கொண்டாள்.

தெய்வமான மகாலட்சுமி மக்களிடம் தன்னைக் காக்கவேண்டும் என்று கூறியது அவர்களை சோதிக்கத்தான். உடனே மக்கள் மகாலட்சுமியை ஒரு கம்பளியில் சுற்றி மறைத்து வைத்துவிட்டார்கள். அசுரன் இதைத் தெரிந்து கொண்டு அவர்களுடன் சண்டை செய்தான். அம்மனையும் பிடித்து விட்டான்.

மக்கள் இறைவனிடம் அந்த பெண்ணைக் காக்க வரவேண்டும் என வேண்டினர். முக்கண் உடைய சிவபெருமானை நினைத்து உருகி பாடல்கள் பாடினர். ஆனாலும் சிவபெருமான் வரவில்லை.எனவே முக்கண் உடைய தேங்காயை எடுத்து சிவபெருமான் அங்கு வரும்வரை தங்கள் தலையில் உடைத்து வணங்குவோம் என வேண்டிக்கொண்டு அவரவர் தலையில் தேங்காயை உடைக்கத் தொடங்கினார்கள்.

மக்களின் பக்தியை மெச்சிய சிவன் அங்கு தோன்றி அம்மனை காப்பாற்றினார். மெய்யன்பர்கள் பொருட்செல்வம் பெற்று மேன்மையுறவும், குழந்தைகள் தங்களது பிள்ளைகள் கல்வியில் சிறந்து விளங்கவும், இளைஞர்கள் திருமணத்தடை நீங்கிடவும் பிரார்த்தனை செய்கிறார்கள்.

ஆடிப்பெருக்கு திருவிழா இங்கு விசேஷமாக நடைபெறும். அன்று பக்தர்கள் மொட்டை அடித்து, தங்கள் தலையில் தேங்காயை உடைத்து நேர்த்திக் கடன் செலுத்துகிறார்கள்.

Leave a Reply