கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழகத்தில் மிக மோசமான மின்வெட்டு இருந்தது. அதன்பின்னர் மேட்டூரில் 3500 கோடி ரூபாய் செலவில் புதிய அனல்மின் நிலையம் அமைக்கப்பட்டு, அந்த மின்நிலையம் இயங்க தொடங்கியவுடன் மின் தட்டுப்பாடு ஓரளவுக்கு குறைந்தது.
இந்நிலையில் நேற்று மதியம் இந்த புதிய அனல்மின் நிலையத்தில் தீடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. அதன் காரணமாக இந்த மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்பட 600 மெகாவாட் மின்சார உற்பத்தி முழுவதும் நிறுத்தப்பட்டது.
தொழில்நுட்ப கோளாறுகளை சரிசெய்யும் பணி துரிதமாக நடைபெற்று வருவதாகவும், இந்த பணி முடிவடைந்ததும் மீண்டும் வழக்கம்போல் மின் உற்பத்தி தொடரும் என்றும் அனல்மின் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த பணி முடியும்வரை தமிழகத்தின் சில இடங்களில் மின்வெட்டு இருக்கும் என அதிகாரிகள் கூறினர்.