[carousel ids=”68241,68240,68239,68238,68237,68236,68235,68233,68234″]
சர்வதேச போதைப்பொருள் கடத்தல் மன்னன் ஒருவன், மெக்சிகோ நாட்டின் சிறையில் இருந்து சுமார் 1.5கிமீ தூரத்திற்கு சுரங்கம் தோண்டி தப்பித்த சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் அவனுக்கு உதவியாக இருந்த மூன்று முக்கிய சிறை உயரதிகாரிகள் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.
சர்வதேச போதை கடத்தல் மன்னனான ‘எல் சாப்போ’ ஜோகுவின் குஸ்மேன் என்பவர் கடந்த 1993ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு மெக்சிகோ சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 2001ஆம் ஆண்டு சிறை கைதிகளுக்கு சலவை செய்த துணிகளை கொண்டுவரும் ஒரு வண்டிக்குள் மறைந்து அவன் தப்பித்து விட்டான். பின்னர் போலீஸாரின் பிடியில் ஒருசில மாதங்களிலேயே சிக்கிய இந்த கடத்தல் மன்னன், நேற்று முன் தினம் மீண்டும் தப்பியோடி விட்டான்.
இந்த கடத்தல் மன்னன் இருந்த சிறை அறையில் இருந்து சுமார் 1.5 கிமீ தூரத்திற்கு சுரங்கம் தோண்டப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குஸ்மேனின் கூட்டாளிகள் அந்த சுரங்கத்தை தோண்டயதாகவும், இதுபற்றிய ரகசிய தகவல் அவனுக்கு முன்பே அளிக்கப்பட்டிருக்கலாம் என்றும் முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சிறை காவலர்கள் அசந்திருந்த நேரத்தை தனக்கு சாதகமாக்கி கொண்டு இந்த சுரங்கத்தின் வழியாக அவன் தப்பிச் சென்றிருக்கலாம் என கருதும் போலீசார், எப்படியும் குஸ்மேனை வளைத்துப் பிடித்து, மீண்டும் சிறைக்குள் அடைப்போம் என தெரிவித்த போலீசார் முழுவீச்சில் அவனை தேடி வருகின்றனர். அல்ட்டிபிலானோ சிறைக்குள் சுரங்கம் வெட்டி குஸ்மேன் தப்பியோடிய சம்பவத்தில் சிறை உயரதிகாரிகளுக்கும் தொடர்பு இருக்கலாம் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுவரும் நிலையில் அந்த சிறையின் இயக்குனர் மற்றும் உயரதிகாரிகள் 3 பேரை பணிநீக்கம் செய்து மெக்சிகோ உள்துறை மந்திரி மிகுவெல் ஏஞ்சல் ஓசோரியோ சாங் உத்தரவிட்டுள்ளார்.