பிரதமர் மோடிக்காக கார் ஓட்டிய மெக்சிகோ அதிபர்
ஐந்து நாட்களில் ஐந்து நாடுகளுக்கு பயணம் செய்யும் திட்டத்துடன் கிளம்பிய பாரத பிரதமர் நரேந்திரமோடி நேற்று அமெரிக்க பாராளுமன்றத்தில் உரையாற்றிவிட்டு இன்று மெக்சிகோ சென்றார். மெக்சிகோவில் பிரதமர் நரேந்திர மோடியை மெக்சிகோ அதிபர் என்ரிக் பினா நீட்டோ சிறப்புடன் வரவேற்றதோடு அவரது தனது காரில் பிரதமர் மோடியை உணவகத்துக்கு அழைத்துச் சென்றார். உணவகத்திற்கு செல்லும் வழியில் மெக்சிகோ அதிபரே காரை ஓட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. இருவரும் குவின்டோனில் என்ற உணவகத்தில் இரவு உணவு அருந்தினர்.
இது குறித்து வெளியுறவு செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப், “மெக்சிகோ சைவ உணவுத் திருவிழாவை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடியை மெக்சிகோ அதிபர் அந்நாட்டு பிரபல உணவகத்து அழைத்துச் சென்றார். பிரதமர் மோடி சென்ற காரை அதிபரே ஓட்டினார்” என தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இருவரும் மெக்சிகோ நாட்டின் சிறப்பு உணவான பீன் டாக்கோஸ் உண்டனர் எனவும் ஸ்வரூப் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக மோடியின் மெக்சிகோ வருகையை முன்னிட்டு அந்நாட்டு அதிபர் எரிக் பதிவு செய்திருந்த டுவீட்டில், “எங்கள் நாட்டுக்கு உங்களை வரவேற்பதில் பெருமிதம் கொள்கிறோம். மெக்சிகோவில் நீங்கள் தங்கியிருக்கும் பொழுது பயனுள்ளதாகவும், மகிழ்ச்சியளிப்பதாகவும் இருக்கும் என நான் நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.