பிரபலமான பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன், கடந்த 2009 ஜூன் மாதம் மர்மமாக இறந்தார். அவரது இறப்பில் சந்தேகம் ஏற்பட்டது. மைக்கேல் ஜாக்சன் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த போது அவருக்கு சிகிச்சை அளித்தவர் டாக்டர் கான்ராட் முர்ரே. அந்தரங்க டாக்டர். இவர், ஜாக்சனுக்கு அதிகமான மயக்க மருந்து கொடுத்ததால் மாரடைப்பு ஏற்பட்டு மூச்சு திணறி ஜாக்சன் இறந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் கடந்த 2011ல் டாக்டர் முர்ரே கைது செய்யப்பட்டு லாஸ்ஏஞ்சல்சில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். முர்ரேவின் மருத்துவ சான்றிதழ் ரத்து செய்யப்பட்டது. 60 வயது வரை அவர் மருத்துவ சேவை செய்ய தடை விதிக்கப்பட்டது.
இந்த தண்டனையை எதிர்த்து கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. முர்ரே சிகிச்சையளித்த காலத்தில் யாருக்கும் எந்த தீங்கும் ஏற்படுத்தவில்லை என்று அவரது வக்கீல் வாதம் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் முர்ரே மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால் அவர் குற்றமற்றவர் என்று தீர்ப்பு கூறினார். இதை தொடர்ந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு லாஸ் ஏஞ்சல்ஸ் சிறையில் இருந்து முர்ரே விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவம் உலக நாடுகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.