ஸ்மார்ட்போன் பயனாளிகளைத் தூக்கத்தில் இருந்து எழுப்ப உதவும் அலாரம் செயலிகளுக்குக் குறைவில்லை. இருந்தாலும் சின்னச் சின்னப் புதுமைகளுடன் புதிய அலாரம் செயலிகள் அறிமுகமாகிக் கொண்டுதான் இருக்கின்றன. இந்த வரிசையில் இப்போது மைக்ரோசாஃப்ட்டும் தன் பங்குக்கு ஒரு அலாரம் செயலியை அறிமுகம் செய்துள்ளது.
பயிற்சி ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையில் மைக்ரோசாஃப்ட் செயல்படுத்தி வரும் மைக்ரோசாஃப்ட் கராஜ் திட்டத்தின் கீழ் , ‘மிமிக்கர் அலாரம்’ உருவாக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு போன்களுக்கான வடிவமைக்கப்பட்டுள்ள இந்தச் செயலி, விளையாட்டு அடிப்படையில் செயல்படுகிறது. அதாவது கண் விழிக்குமாறு இந்தச் செயலி குரல் கொடுத்ததும் இதை நிறுத்த வேண்டும் என்றால் கேம் விளையாட வேண்டும்.
குறிப்பிட்ட போஸில் சுயபடம் எடுப்பது, குறிப்பிட்ட வண்ணத்திலான பொருளைக் கண்டுபிடிப்பது உள்ளிட்ட மூன்று விதமான விளையாட்டுகள் இருக்கின்றன. இவற்றை வெற்றிகரமாக விளையாடி முடித்தால் மட்டுமே செயலி அமைதியாகும். இல்லை என்றால் மீண்டும் எச்சரிக்கை செய்யத் தொடங்கும்.
வீடியோ கேமுக்குப் பழக்கப்பட்ட தலைமுறையைத் தூக்கத்தில் இருந்து கண் விழிக்கச்செய்யவும் அதே முறையைப் பயன்படுத்த முயற்சிப்பது நல்ல உத்திதான் இல்லையா?
தரவிறக்கம் செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.microsoft.mimickeralarm