பிரேமலதா நடத்திய நள்ளிரவு பூஜை எதற்காக? பெரும் பரபரப்பு
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா நேற்று நள்ளிரவில் காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடத்தியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற தேமுதிகவின் ‘திருப்புமுனை மாநாடு’ சிறப்பாக நடந்ததற்காக இந்த பூஜை நடந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவிலுக்கு நேற்று இரவு சுமார் 9.00 மணியளவில் வந்த பிரேமலதா, பின்னர் மூன்று மணி நேரம் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்துகொண்டார். நவாவரண பூஜை, சிறப்பு பூஜை, சிறப்பு தீப ஆராதனை ஆகியவற்றில் கலந்து கொண்ட பிரேமலதா பின்னர் கோவிலில் இருந்து நள்ளிரவு 12மணிக்கு மேல் வெளியே வந்தார்.
அந்த இரவிலும் அவருக்காக காத்திருந்த செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, ‘காஞ்சிபுரத்தில் திருப்பு முனை மாநாடு வெற்றி பெறவேண்டும் என்று காமாட்சி அம்மனை வேண்டி இருந்தோம். வேண்டியது போலவே மிகப்பெரிய அளவில் வெற்றி மாநாடாக அமைந்திருக்கிறது. அதற்காக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு வந்திருக்கிறேன். மாநாடு மட்டும் திருப்புமுனை இல்லை. தமிழ்நாட்டு அரசியலிலும் நிச்சயமாக திருப்புமுனை 2016ல் உருவாகும்’ என்று கூறினார்.
மேலும் 8 தேமுதிக எம்எல்ஏக்கள் பதவி விலகியது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த பிரேமலதா இந்த விஷயம் 4 வருடத்திற்கு முன்பே நடந்த கதை. அதற்கு தற்போது மூடுவிழா நடைபெற்றது என கூறினார்.