குறுகிய கால போருக்கு தயாராகுங்கள். இந்திய ராணுவத் தளபதி திடீர் எச்சரிக்கை
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் கடந்த சில நாட்களாக பதட்ட நிலை உருவாகியுள்ள நிலையில் குறுகிய கால போருக்கு தயாராகுங்கள் என இந்திய ராணுவத் தளபதி தல்பீர் சிங் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 1956 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக நடந்த போரில் உயிர் நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி டெல்லியில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் மூத்த ராணுவ வீரர்கள் கலந்துகொண்ட கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்ட ராணுவ தளபதி தல்பீர் சிங் மிகவும் உணர்ச்சிகரமாக பேசினார்.
அவர் பேசியதாவது: “எதிர்காலத்தில் எந்த விதமான எச்சரிக்கையுமின்றி குறுகிய காலப் போர் ஏற்படும் வகையான சூழல் தெரிகிறது. இதற்காக நாம் எந்த நேரத்திலும் விழிப்புடன் தயார் நிலையில் இருக்க வேண்டியது அவசியம். தற்போதைய நிலையில் இதுவே நமது யுக்தி.
கடந்த சில ஆண்டுகளில் நமக்கான சவால்கள் அதிகரித்துள்ளன. அதற்கேற்ற நுணுக்கத்தையும் நமது ராணுவம் கூடவே பெற்றுள்ளது. எல்லையில் அவ்வப்போது ஏற்படும் அத்துமீறல்களை வீரர்கள் விழிப்புடன் எதிர்கொண்டு வருகின்றனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநில அமைதியை சீர்குலைக்க புதிய வகையிலான அத்துமீறல்கள் நடந்துவருகின்றன. அதற்கு சமீபத்திய சம்பவங்களே எடுத்துக்காட்டு. பொதுமக்களும் நமக்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குகின்றனர். சாதிய மோதல்கள், வன்முறைகளிலுருந்து மக்களை பாதுகாக்கும் உள்நாட்டு பணியும் சிறப்பாக நடக்கிறது. இவை அனைத்தையும் தாண்டியும் மக்களிடையே ஒற்றுமை நிலவுகிறது”
இவ்வாறு இந்திய ராணுவத் தளபதி தல்பீர் சிங் பேசியுள்ளார்.