கம்பு ஒரு சத்துமிக்கத் தானியப் பயிராகும். கம்பு தானியத்தில் அதிகமான அளவில் புரதம், கால்சியம், பாஸ்பரம், வைட்டமின்கள் உள்ளதால் உணவுச்சத்து தரத்தில் முதன்மை பெற்று விளங்குகின்றது. போதிய அளவு மாவுச்சத்தும், தேவையான அமிலங்களான கரோட்டின், லைசின் ஆகியவற்றைப் பெற்ற புரதமும், வைட்டமின்களும், தாது உப்புகளும் நிறைந்த தானியம் கம்பு, தங்க தானியம் என்று அழைக்கப்படுகிறது.
உடலில் ஏற்படும் பல நோய்களுக்குக் காரணம் வைட்டமின் சத்துக் குறைவேயாகும். வைட்டமின் அளவில் கம்பு மற்ற தானியங்களைக் காட்டிலும் சிறந்தே விளங்குகிறது. ஆரோக்கியமான தோலிற்கும், கண்பார்வைக்கு முக்கிய சத்தான வைட்டமின் ஏவை உருவாக்குவதற்கு முக்கிய காரணி பீட்டா கரோட்டீன். இது கம்பு பயிரில் இயற்கையிலேயே அதிக அளவில் உள்ளது. இரவு நேரங்களில் துங்காமல் கண் விழிப்பவர்கள், அதிக நேரம் ஒரே இடத்திலிருந்து வேலை செய்பவர்கள், அதிக சூடுடைய பகுதிகளில் வேலை செய்பவர்கள், அதிக மன அழுத்தம் கொண்டவர்களின் உடலானது அதிக உஷ்ணமடையும்.
இவர்கள் கம்பை கஞ்சியாகக் காய்ச்சிக் காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் சூடு குறையும். உடல் சோர்வு அடைபவர்கள் புத்துணர்வு பெற கம்பை கூழாக்கி, அதனுடன் மோர் கலந்து மதிய வேளையில் அருந்தி வந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு அடைவர். இன்றும் சில இடங்களில் இதுபோல் கூழ் செய்து விற்பனை செய்து வருகிறார்கள். அஜீரணக் கோளாறு கொண்டவர்கள் கம்பங்கஞ்சியை அருந்தி வந்தால் அஜீரணக் கோளாறுகள் நீங்கி நன்கு பசியெடுக்கும். வயிற்றில் புண்கள் உண்டானால் வாயிலும் புண்கள் ஏற்படும்.
மேலும் வயிற்று புண்களை குணப்படுத்தும் குணம் கம்புக்கு உண்டு. கம்புடன் அரிசி சேர்த்து நன்கு குழையும்படி சோறாக்கி மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண், வயிற்றுப்புண், வாய்ப்புண் குணமாகும். உடல் வலுவடைய கம்பு மிகச் சிறந்த உணவாகும். அடிக்கடி கம்பங்கஞ்சி சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும்.
* கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை தெளிவாக்கும்.
* இதயத்தை வலுவாக்கும்.
* சிறுநீரைப் பெருக்கும்.
* நரம்புகளுக்குப் புத்துணர்வைக் கொடுக்கும்.
* இரத்தத்தைச் சுத்தமாக்கும்.
* உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும்.
* நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும்.
* தாதுவை விருத்தி செய்யும்.
* இளநரையைப் போக்கும்.
அதிகமாக கம்பங்கஞ்சி அருந்தினால் சில சமயங்களில் இருமல், இரைப்பு போன்றவற்றை உண்டாக்கும். அதனால் அளவோடு சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம். கம்பு மட்டுமல்லாமல் நமது உணவில் சேர்க்க மறந்து போன. சோளம், கேழ்வரகு, திணை, சாமை, குதிரைவாலி, வரகு, பனிவரகு போன்ற தானியங்கள் இன்னும் பல தானியங்களை உணவில் சேர்த்துக் கொண்டால் நோய் இல்லாமல் ஆரோக்கியமாக வாழலாம்.