மணல் மாஃபியாவை தமிழகத்திற்கு அறிமுகம் செய்தவர் ஓபிஎஸ். தமிழக அமைச்சர் திடுக்கிடும் தகவல்
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியும், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியும் ஒன்றாக இணைய ஒருபக்கம் பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த பேச்சுவார்த்தையை முறிக்கும் வகையில் ஒருசிலர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருவதும் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் மணல் மாபியா சேகர் ரெட்டியை தமிழகத்துக்கு அறிமுகப்படுத்தியவரே முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தான் என அமைச்சர் சி.வி.சண்முகம் திடுக்கிடும் புகார் ஒன்றை கூறியுள்ளார்.
இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சி.வி.சண்முகம், ‘ ‘ஓபிஎஸ் மீதான ஊழல் புகார்களை முதலில் விசாரிக்க வேண்டும். அவர் மீதான குற்றச்சாட்டுகளின் விசாரணைக்கு ஓபிஎஸ் தயாரா என்றும் அமைச்சர் சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், மறைந்த முதல் ஜெயலலிதா பெங்களூரு சிறையில் இருந்தபோது, தமிழக முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், அவசரகதியில் சேகர் ரெட்டியை திருப்பதி தேவஸ்தான உறுப்பினராக நியமிக்க என்ன காரணம்? என்று சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்’
அமைச்சரின் இந்த பேட்டி ஓபிஎஸ் அணியினர்களை அதிருப்தி அடைய செய்திருப்பதாகவும், பேச்சுவார்த்தைக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் இந்த பேட்டி இருப்பதாகவும் கருதப்படுகிறது.