முதல்வரை ஓய்வு எடுக்க சொல்லும் கருணாநிதி, ஏன் ஓய்வு எடுக்கவில்லை? கோகுல இந்திரா கேள்வி
அதிமுக அரசின் நான்காண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் ஆர்.கே.நகர் தொகுதியின் வெற்றி விழா ஆகியவை இணைந்து நடத்தப்பட்ட விழா ஒன்று நாகர்கோவிலில் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர் தளவாய் சுந்தரம் தலைமை தாங்கினார். இந்த விழாவில் கலந்து கொண்ட கைத்தறி துறை அமைச்சர் கோகுல இந்திரா பேசியபோது, :””கடந்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணிக் கட்சிகளால் அ.தி.மு.க. வெற்றி பெறவில்லை. அ.தி.மு.க.வை வைத்தே, எதிர்கட்சியினரான விஜயகாந்த்தும், கிருஷ்ணசாமியும், கம்யூனிஸ்ட்களும் வெற்றி பெற்றார்கள். அவர்களின் நடவடிக்கைகள் சரியில்லாததால், உள்ளாட்சி தேர்தலிலும், நாடாளுமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. தனித்து போட்டியிட்டு, அதிக இடங்களை கைப்பற்றி, வரலாற்று சாதனை படைத்தது.
ராமதாஸ் ஒரு இனத்துரோகி. காவிரி தண்ணீர் பிரச்னையிலே அரசை எதிர்த்து மேல்முறையீடு செய்தார். கருணாநிதி தமிழின துரோகி. முதல்வர் தமிழக மக்களுக்கு எந்த நல்ல திட்டங்களை கொண்டு வந்தாலும் அதை விமர்சிக்கவில்லை என்றால், அவரால் இருக்க முடியாது. தமிழகத்திலே எந்த திட்டம் வந்தாலும் மத்திய அரசு திட்டம், மத்திய அரசு நிதி என்று தமிழிசை சொல்கிறார்.
அந்த மத்திய அரசுக்கு மாநில அரசின் கஜானாவில் இருந்துதான் நிதி போகிறது. வைகோவுக்கு அங்கீகாரம் கொடுத்ததே அ.தி.மு.க.தான். ஈழப் பிரச்னையை வைத்து அரசியல் செய்து வந்த அவர், இப்போது முல்லை பெரியாரை வைத்து அரசியல் பண்ணுகிறார். குஷ்புவை வைத்து அரசியல் பண்ணும் இளங்கோவன், அமைச்சராக இருக்கும் போது என்ன நலத் திட்டங்களை கொண்டு வந்தார் என்று சொல்லமுடியுமா?
முதல்வர் ஓய்வெடுக்க வேண்டும் என கூறும் கருணாநிதி, ஏன் இன்னும் ஓய்வு பெறவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இதுவரை கருணாநிதி வீல்சேரில் வருவதை விமர்சிக்க யாரையும் நம் முதல்வர் அம்மா அவர்கள் அனுமதித்தது இல்லை. ஆனால், இன்று முதல்வருக்கு உடல் நிலை சரியில்லை என்றால் கருணாநிதி விமர்சிக்கிறார்.
மெட்ரோ ரயிலை ஸ்டாலின், ஜப்பான் சென்று ஒப்பந்தம் செய்வதற்கு முன்பாகவே, மத்திய அரசு அதனை செய்து விட்டது. இப்போது அ.தி.மு.க. அரசு வேகமாக பணிகளை முடித்து, மக்கள் பயன்பட்டுக்காக மெட்ரோ ரயில் ஓடுகிறது. இப்போது மெட்ரோ ரயிலை நாங்கள் தான் கொண்டு வந்தோம் என அரசியல் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
மக்கள் நலத் திட்டங்கள் பல செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கின்றன. ஆர்.கே.நகரில் இமாலய வெற்றி பெற்றதை போல் வரும் சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. அபார வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது” என்றார்.